யாழ். வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் சவுக்கங்காட்டில் சட்டவிரோத சவுக்கு மரங்களை வெட்டி கடத்த முற்பட்ட ஏழு துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மணற்காடு சவுக்கங்காட்டில் சட்ட விரோதமாக சவுக்கு மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய விசேட குற்ற தடுப்புப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் காட்டுப் பகுதியை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலமையிலான பொலிசார் சுற்றி வளைத்த போது சட்ட விரோதமாக சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட சமயம் ஏழு துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு பெண்களையும், கைப்பற்றப்பட்ட ஏழு துவிச்சக்கர வண்டிகளையும் பருத்தித்துறை பொலிஸாரால் இன்று (30) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.