ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை?

0
159

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்.
ராமநாயக்க விடுதலை செய்யப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் எதிர்பார்ப்புக்கள் நிலவிய நிலையிலேயே, தற்போது அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் – நீண்ட காலமாக எதுவித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கேள்வி எழுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது மன்னிப்பின் அடிப்படையில் அவர்களை விடுவிக்க இணங்குவாரா? அதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றனவா? அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தரப்புக்கள் பல வருடங்களாகக் குரலெழுப்பி வருகின்றன.
ரணில் – மைத்திரி ஆட்சிக்காலத்தில் அவர்களில் பெரும்பாலானவர்களை விடுவிப்பதற்கான வாய்ப்புக்கள் இருந்தன. ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது குறித்துப் பிரத்தியேக நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுக்கவில்லை.
ஐந்து வருட காலத்தில் படிப்படியாக அவர்களில் கணிசமானவர்களை விடுவித்திருக்கலாம்.
ஆனால், விடயங்கள் சரியாகக் கையாளப்படவில்லை.
புதிய அரசியல் யாப்புக்கான கற்பனையுடனேயே ஐந்து வருடங்கள் வீணாகின.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறான சில நீண்ட கால பிரச்னைகளைத் தீர்த்திருக்க முடியும்.
ஆனால், சம்பந்தன் இந்த விடயத்தில் பிரத்தியேக கவனம் செலுத்தவில்லை.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உண்மையிலேயே தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அக்கறை இருக்கின்றதா? அவர்களின் வாழ்வு எக்கேடுகெட்டாவது போகட்டுமென்று எண்ணுகின்றார்களா? தமிழ் அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை உற்று நோக்கினால் இவ்வாறான கேள்விகள் தவிர்க்க முடியாதவையாகின்றன.
ஏனெனில், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உதட்டளவிலான ஈடுபாட்டைத்தான் பலரும் காண்பிக்கின்றனரெனத் தெரிகின்றது.
பாராளுமன்றத்தில் பேசிவிட்டால் தங்களின் பணி முடிந்து விட்டதாகவே பலரும் எண்ணிக் கொள்கின்றனர்.
கூட்டமைப்புக்கு மாற்றானவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அறிக்கைகளுக்கு அப்பால் எதனையும் செய்ய முயற்சிக்கவில்லை.
தங்களின் மாற்று அரசியலுக்கான ஒரு துருப்புச்சீட்டாகவே இவ்வாறான பிரச்சினைகளைக் கையாள முயற்சிக்கின்றனர்.
அரசாங்க தரப்பினருடன் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எவ்வித பேச்சுக்களையும் முன்னணி இதுவரையில் மேற்கொண்டதில்லை.
பாராளுமன்றத்தில் பேசுவதால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமென்றால், தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகள் எப்போதோ தீர்ந்திருக்க வேண்டுமல்லவா! பாராளுமன்றத்தில் பேசத் தான் வேண்டும்.
ஆனால், பேசுகின்ற விடயங்களை அரசியல் மட்டத்தில் கையாளுவதற்கான முயற்சிகளையும் தமிழ் கட்சிகள் முன்னெடுக்க வேண்டும்.
இதுவரையில் நடந்தவற்றை விடுவோம்.
இப்போதுள்ள நிலைமையை சரியாகக் கையாள்வதன் ஊடாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரத்தியேக முயற்சிகளை எடுக்க முடியும்.
அதற்கான வாய்ப்புக்கள் இப்போது உண்டு.
கூட்டமைப்பு இதற்கான பிரத்தியேக கலந்துரையாடல்களை முன்னெடுக்கலாம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊடாக அரசியல் கைதிகளை முழுமையாக இல்லாவிட்டாலும் கூட குறிப்பிட்டளவானவர்களை விடுவிக்க முடியும்.
இதனை கட்டம் கட்டமாக முன்னெடுக்கலாம்.
ஆனால், இதற்கான முயற்சியை தமிழர் தரப்பிலிருந்து தான் முன்னெடுக்க வேண்டும்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வலியுறுத்தி வரும் சிவில் சமூக குழுக்கள் என்போரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரத்தியேகமாக அணுகுவதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம்.
அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு வாய்ப்பான தருணமிது.
இந்த சந்தர்ப்பத்தை விட்டால் பின்னர் இந்த விடயத்தைக் கையாள்வது கடினமானது.