அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்கும் சீன உளவுக் கப்பலைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தியிருக்கின்றது.
இதற்கு அமெரிக்காவும் உதவிவருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
சீனாவை மையப்படுத்தித்தான் இலங்கை விவகாரம் சர்வதேச அளவில் நோக்கப்படுகின்றது.
அண்மையில், அமெரிக்காவின் வெளியக உளவுத்துறையான மத்திய புலனாய்வு பணியகத்தின் (சி. ஐ. ஏ.) தலைவர் கூட, இலங்கை தொடர்பில் பேசியிருந்தார்.
அதாவது, சீனாவுடன் பொருளாதார தொடர்புகளை பேணி வரும் நாடுகள், இலங்கையின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமென்று தெரிவித்திருந்தார்.
மேற்குலகம், முக்கியமாக அமெரிக்கா எவ்வாறு இலங்கையை நோக்குகின்றது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
இந்தப் பின்புலத்தில் தான், சீன உளவுக் கப்பலொன்று, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்கின்றது.
இது விரும்பியோ விரும்பாமலோ கொழும்பை இந்து சமுத்திர பிராந்தியத்தின் அதிகார போட்டிக்குள் தள்ளிவிட முயற்சிக்கின்றது.
இதனை எவ்வாறு ரணில் சமாளிக்கப் போகின்றார்? அனைத்து தரப்பையும் சம தூரத்தில் வைத்து கையாளுவதில் ரணிலால் வெற்றிபெற முடியுமா? சீனாவின் அதிக தலையீடுகள் மகிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தான் இடம்பெற்றது.
ராஜபக்ஷவின் வெளிவிவகார அணுகுமுறையின் விளைவாகவே சீனாவின் பிடி இலங்கைக்குள் இறுகியது.
இந்து சமுத்திர பிராந்தியத்தில் தனது பிரசன்னத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாகவே இலங்கையை சீனா பயன்படுத்த முயற்சிக்கின்றது.
இலங்கையை நோக்கிய நகர்வுகள் இதனையே தெளிவுபடுத்துகின்றன.
இந்தியாவைப் பொறுத்த வரையில் அதன் புவியியல் அருகாமை, அதற்கு பக்கபலமாகவும் வாய்ப்பாகவும் இருக்கின்றது. இதேவேளை, இந்தியாவின் உடனடி அயல் நாடான இலங்கைத் தீவின் மூலம் சீனா பதற்றங்களை அதிகரிக்க முற்பட்டால், திபெத் ஊடாக இந்தியா நெருக்கடியை அதிகரிக்க முடியும்.
இவ்வாறான வாய்ப்பும் இந்தியாவுக்கு உண்டு.
ஆனால் கேள்வி, இவ்வாறான அதிகாரப் போட்டிக்குள் அதிகம் சிக்குப்படாமல் அதேவேளை அனைத்து தரப்புக்களையும் சம தூரத்தில் வைத்து கையாளக்கூடிய நிலையில் இலங்கை இருக்கின்றதா? இதுவரையில் ராஜபக்ஷக்களின் பிரச்சினையாக இருந்த விடயம் – இப்போது ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சினையாக மாறியிருக்கின்றது.
ரணிலால் இதனை வெற்றிகரமாகக் கையாள முடியுமா? அம்பாந்தோட்டை துறைமுக விடயத்தில் சீனாவின் உள்நுழைவுக்கான அடித்தளம் ராஜபக்ஷவின் காலத்தில் போடப்பட்டிருந்தாலும் கூட, அம்பாந்தோட்டை துறைமுகமானது, ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில் தான், 99வருட குத்தகைக்கு வழங்கப்பட்டது.
சர்வதேச விவகாரங்களில் மிகுந்த அனுபவமுள்ள ரணில் விக்கிரமசிங்க, ஒரு தேசிய உடைமையை எவ்வாறு 99வருட குத்தகைக்கு வழங்கினார்? விடயங்களை தூரநோக்கில் சிந்திக்கவில்லையா? கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் தான், இவ்வாறானதொரு முடிவை அவர் எடுத்திருந்தாலும்கூட, ஏன் 99வருட குத்தகைக்கு வழங்க வேண்டும்? குறைவான காலத்துக்கு வழங்கியிருக்கலாம்.
99வருட குத்தகை என்பது, கிட்டத்தட்ட, ஒரு தேசிய சொத்தை பிறிதொருவருக்கு வழங்குவதற்கு சமமானது.
எதிர்காலத்தில், இந்து சமுத்திர பிராந்தியத்தில் போர் பதற்றங்கள் ஏற்படுமாக இருந்தால், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பயன்படுத்துவதை, கொழும்பால் அதிகம் தடுக்க முடியாமல் போகலாம்.
இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக அம்பாந்தோட்டை பயன்படுத்தப்படுவதை நாம் அனுமதிக்கமாட்டோம்- என்று கூறினாலும் கூட, போரின் போது இவ்வாறான வாக்குறுதிகளுக்கு எவ்வித பெறுமதியும் இருக்காது.
ரணில் எவரும் எதிர்பாராத வகையில் மீளவும் அதிகாரத்துக்கு வந்திருக்கின்றார்.
பொருளாதார நெருக்கடியினதும் அரசியல் கொந்தளிப்பினதும் விளைவாகவே ரணிலின் மீள் பிரவேசம் நிகழ்ந்திருக்கின்றது. இல்லாவிட்டால், ஓர் ஆசனத்துடன் இருந்த ஒருவர் ஒரு போதுமே ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது.
இந்த நிலையில், ராஜபக்ஷக்களால் ஏற்படுத்தப்பட்ட புவிசார் அரசியல் நெருக்கடிகளை ரணில் எவ்வாறு கையாளப் போகின்றார்? அவரால் சமாளிக்க முடியுமா? இந்தக் கேள்விக்கான பதிலில்தான், ரணிலின் அரசியல் எதிர்காலம் தங்கியிருக்கின்றது.