நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றத்தை முன்வைத்து தமிழ் தரப்புகள் விவாதித்துவருகின்றன.
நேற்றுவரை, சனல் 4 ஆவணப்படத்தை முன்வைத்து, விவாதித்தவர்கள் அனைவரது உதடுகளும் சரவணராஜாவை உச்சரித்துக் கொண்டிருக்கின்றன.
வடக்கு, கிழக்கை சேர்ந்த சட்டத்தரணிகள் தங்களின் எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றனர்.
தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் தங்களின் ஒரு நாள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
தமிழர் தரப்புகளின் எதிர்ப்பு யாரை நோக்கியதாக இருக்கின்றது?
சந்தேகமில்லை – சர்வதேசத்தை நோக்கியதாகத்தான் இருக்கின்றது.
யுத்தத்திற்கு பின்னரான கடந்த 14 வருடகால கதைகள் இப்படியானதாகத்தான் இருந்திருக்கின்றது.
நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றத்தை முன்வைத்து தமிழ் கட்சிகள் சர்வதேசத்தின் தலையீட்டை கோரிக்கொண்டிருக்கும் சமவேளையில், நாட்டின் ஜனாதிபதியோ, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தவறானது – அதனை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்று, சர்வதேச ஊடகமொன்றிடம் கடும் தொனியில் கூறியிருக்கின்றார்.
ஐக்கிய நாடுகள் சபையையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையையும் வேறாக்கி, பேரவையின் அணுகுமுறைகள் தவறானவை, அதனை இலங்கை நிராகரிப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையை விமர்சிப்பது, கடுமையாக எதிர்ப்பதில் முன்னோடியே அமெரிக்காதான் என்பது பலரும் அறியாத ஒன்று.
ஆனால் இதனை ரணில் நன்கறிவார்.
அமெரிக்காவில் குடியரசு கட்சி ஆட்சிக்கு வருகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பதுண்டு – அதிலிருந்து வெளியேறுவதுண்டு.
ஜோர்ஜ். டபிள்யு. புஷ், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது, மனித உரிமைகளை பாதுகாப்பவர்களும் எதிர்ப்பவர்களும் எவ்வாறு ஒரே இடத்தில் இருக்க முடியுமென்று, புஷ் கேள்வி யெழுப்பியிருந்தார் – பேரவையில் பங்குகொள்வதை புஷ் நிர்வாகம் நிராகரித்தது.
டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவானதை தொடர்ந்து, அமெரிக்கா உனடியாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறியது.
அப்போது, ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவராக இருந்த நிக்கி ஹேலி (Nமைமi ர்யடநல) ஆகக் குறைந்தது மனித உரிமைகள் பேரவையென்னும் சொல்லுக்குக் கூட இந்த சபை தகுதியற்றது – பெயரில் உள்ளவற்றைக் கூட, இது முறையாக பிரதிபலிக்கவில்லையென்று கூறி பேரவையை கடுமையாக தாக்கிவிட்டு, அதிலிருந்து வெளியேறுவதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்திருந்தது.
அமெரிக்க குடியரசு கட்சியின் அணுகுமுறையைத்தான் ரணில் இப்போது நினைவுபடுத்தியிருக்கின்றார்.
நம்மால், ரணிலின் கருத்துக்கள் மீது சீறிவிழ முடியுமென்றால், அமெரிக்க குடியரசு கட்சியின் அணுகுமுறை மீது எவர் கேள்வியெழுப்புவது? மனித உரிமைகள் பேரவையின் உள் பலவீனங்களை நாடுகள் நன்கறியும்.
பலம்பொருந்திய நாடுகளின் அதிகார மோதல்களுக்கு முன்னால் எதுவுமற்ற ஒரு சபைதான், ஐ.நா மனித உரிமை பேரவை.
இதனை புரிந்துகொண்டிருப்பதால்தான், ரணிலால், இவ்வாறானதொரு நெருக்கடியான சூழலில் கூட, இந்தளவு திடகாத்திரமாக பேச முடிகின்றது.
ஆனால் மறுபுறமோ, நீதிபதி சரவணராஜாவின் விடயத்தில், ஐ.நா மனித உரிமைகள் பேரவை தலையீடு செய்ய வேண்டுமென்று கூறி, தமிழர் தரப்புகள் பேசிவருகின்றன.
ஆனால், சம வேளையில், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட உதவிக்காக காத்துக் கொண்டிருக்கும் ஒரு நாட்டின் அதிபர், உலகின் முதன்மையான சர்வதேச ஸ்தாபனமொன்றை, மேற்குலகின் எல்லைக்குள்ளேயே கடுமையாக எதிர்த்து பேசுகின்றார்.
இந்த ரணிலைத்தான், இந்தியாவும் அமெரிக்காவும் விரும்புவதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் கூறிவருகின்றனர்.
உண்மையில் விடயங்கள் யாருக்கு புரியவில்லை – ரணில் போன்றவர்களுக்கா – அல்லது, நமது தமிழ் தேசியர்கள் என்போருக்கா?