ராம் பொத்னேனி நடிக்கும் ‘டபுள் இஸ்மார்ட்’

0
155

லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘ தி வாரியர்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமான தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் ராம் பொத்னேனி நடிக்கும் புதிய படத்திற்கு ‘டபுள் இஸ்மார்ட்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் மற்றும் படத்தின் வெளியிட்டு திகதி ஆகியவற்றை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

தெலுங்கின் முன்னணி இயக்குநரான புரி ஜெகன்நாத் தயாரித்து, இயக்கும் புதிய திரைப்படம் ‘டபுள் இஸ்மார்ட்’. இவரது இயக்கத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘இஸ்மார்ட் ஷங்கர்’ எனும் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகும் இந்த திரைப்படத்திலும் ராம் பொத்னேனி கதையின் நாயகனாக நடிக்கிறார்.

முழு நீள எக்சன் பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகும் இந்த திரைப்படத்தை புரி கனெக்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் புரி ஜெகன்னாத் மற்றும் நடிகை சார்மி கௌர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

நடிகர் ராம் பொத்னேனியின் பிறந்த நாளான இன்று அவர் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டிலை அறிவித்து, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதியன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.