வர்த்தக கவுன்ஸிலின் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு!

0
9

கொழும்பு ஷாங்க்ரிலா ஹோட்டலில் நேற்று காலை நடைபெற்ற இலங்கை வர்த்தக கவுன்ஸிலின் உலகளாவிய சம்மேளனத்தின் வருடாந்தப்  பொதுக் கூட்டத்தின் ஆரம்ப விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டார்.

உலகம் முழுவதிலுமுள்ள இலங்கை வர்த்தகர்களை ஒரே இடத்தில் இணைக்கும் மேடையாக இலங்கை வர்த்தக கவுன்ஸிலின் உலகளாவிய சம்மேளனம் செயல்படுகிறது.

“உலகளாவிய இலங்கை வர்த்தகங்களை ஒன்றிணைத்து – முன்னோக்கி ” என்ற தொனிப்பொருளில் நேற்றும், இன்றும்  நடைபெறும் இந்த மாநாட்டில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த தொழில்முயற்சியாளர்கள் இணைந்துள்ளனர்.

உலகளாவிய வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துதல், புதிய முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் உலகெங்கிலும் உள்ள இலங்கை தொழில்முனைவோரின் ஆதரவுடன் நாட்டின் பொருளாதாரத்திற்கு தீவிரமான பங்களிப்பைப் பெறுவது என்பன தொடர்பில்  கலந்துரையாடல் தளமொன்று இம்முறை மாநாட்டின் போது ஏற்படுத்தப்படும்.

இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளதால், அச்சமின்றி எமது  நாட்டிற்கு வந்து முதலீடு செய்யுமாறு வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வர்த்தக சமூகத்திற்கு அழைப்பு விடுத்தார்.

அந்த அழைப்பிற்கு வருகை தந்திருந்த வர்த்தக சமூகத்தினர்  சாதகமாக பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கவுன்ஸில்  பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அடையாள ரீதியாக கௌரவிப்பு விருதுகளை வழங்கினார்.