வாசனை திரவிய ஏற்றுமதியில் வரலாற்று சாதனை!

0
3

2024 ஆம் ஆண்டில் விவசாய ஏற்றுமதி மூலம் 89,217 மில்லியன் ரூபாய் அந்நியச் செலாவணி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. வரலாற்றில் வாசனை திரவியங்கள் ஏற்றுமதியிலிருந்து கிடைத்த அதிக வருமானம் இது என அதன் அபிவிருத்திப் பணிப்பாளர் உபுல் ரணவீர தெரிவித்தார்.

கடந்த வருடம் 44,262 மெட்ரிக் டன் வாசனை திரவியங்கள் ஏற்றுமதி செய்ததன் மூலம் இலங்கையின் அதிகபட்ச வருமானமாக , 89,217 மில்லியன் ரூபாய் பெறப்பட்டது.இதன்படி,மிளகு ஏற்றுமதியிலிருந்து அதிகபட்ச வருமானமாக 51,524 மில்லியன் ரூபாய் ஈட்டப்பட்டது.

இந்தியாவிற்கு 23,932 மெட்ரிக் டன்கள் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்ட மூலம் 47,436 மில்லியன் ரூபாய் வருமானம் பெறப்பட்டதாக, மீதமுள்ள வருமானம் ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கு மிளகு ஏற்றுமதி செய்வதன் மூலம் பெறப்பட்டுள்ளதாகவும் ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

8,852 மெட்ரிக் டன் பாக்கு ஏற்றுமதி மூலம் 11,598 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.2,317 மெட்ரிக் டன் ஜாதிக்காய் ஏற்றுமதி செய்யப்பட்டு, 4,648 மில்லியன் ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளது.
மேலும், மஞ்சள்,இஞ்சி, கோப்பி , ஏலக்காய், கிராம்பு, வெண்ணிலா, வெற்றிலை, சோளம், கோக்கோ உள்ளிட்ட பிற பயிர்களின் ஏற்றுமதியிலிருந்து 20,526 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.