விவசாயப் பயிர்களில் வெள்ளை ஈ தாக்கம்!

0
13

தென்னை மரத்தில் மாத்திரமல்லாது ஏனைய விவசாயப் பயிர்களிலும் வெள்ளை ஈ தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் விவசாயத்துறையினர் மற்றும் மாவட்டச் செயலர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிய வெள்ளை ஈ தாக்கம், தற்போது மீண்டும் வரத் தொடங்கியுள்ளது.

குளிரான காலநிலை காரணமாக அதன் தாக்கம் குறைவடைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அது பரவத் தொடங்கியுள்ளது என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

தென்னை மரத்தில் மாத்திரமல்லாது ஏனைய விவசாயப் பயிர்களிலும் அது பரவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
விவசாய ஆராய்ச்சி திணைக்களத்தால் இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் குறிப்பிட்டார்.

தென்னை மரங்களில் பரவும் வெள்ளை ஈ தாக்கத்தை தம்மால் கட்டுப்படுத்துவது சவாலானது எனவும் அதற்கு தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
ஏனைய விவசாயப் பயிர்களில் பரவும் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த இரசாயன முறையைப் பின்பற்றுவதாகக் குறிப்பிட்டார்.

அதற்கான உதவிகளை வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம் ஊடாக வழங்குவதாக, வடக்கு மாகாண பிரதம செயலர் உறுதியளித்தார்.

தென்னை பயிர்ச் செய்கை சபையினரையும், தென்னை பயிர்ச்செய்கை ஆராய்ச்சி அலகினரையும் அழைத்து விரைவில் சந்திப்பு நடத்தி இதனைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாட்டை துரிதமாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.