சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. பிரதான எதிர்க்கட்சிகளுடன் பரந்துபட்ட அரசியல் கூட்டணியை ஸ்தாபிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து வெளியடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு எதிராகவே 69 இலட்ச மக்கள் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தவறான தீர்மானங்களினால் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் குறுகிய காலத்தில் பலவீனமடைந்தது. தவறுகளை திருத்திக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தவில்லை. சிறந்த ஆலோசனைகளை வழங்கிய எம்மை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றினார். தவறான தீர்மானங்கள் நாட்டுக்கு பாரிய விளைவுகளை தற்போது ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசிய கட்சியும் ஒன்றிணைந்து கூட்டணியை அமைக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. பொதுஜன பெரமுனவுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் மக்களாணை கிடையாது.
இவ்விரு தரப்பினரையும் ஒன்றிணைத்து அமைக்கும் கூட்டணியை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியை ஸ்தாபிப்பதற்கான பேச்சுவார்த்தையில் தற்போது ஈடுபட்டுள்ளோம்.
வெகுவிரைவில் புதிய கூட்டணி ஸ்தாபிக்கப்படும்.எந்த அரசியல் கட்சிக்கும் இனி தனித்து ஆட்சி அமைக்க முடியாது.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சரியோ தவறோ, தேர்தலை உரிய காலத்தில் நடத்தினார்.
அவரின் அந்த கொள்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பின்பற்ற வேண்டும்.
தேர்தலை பிற்போட்டால், அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.