2020 ஆம் நிதியாண்டுக்குரிய சேவை செலவினங்களுக்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணையை அடுத்த மாதம் 12 ஆம் திகதி நிறைவேற்றுவதென பாராளுமன்ற அலுவல்களுக்கான தெரிவுக்குழு நேற்று தீர்மானித்துள்ளது.
இந்தக் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. இதன்போது, கொவிட்-19 தொற்றுப் பரவலை கருத்தில் கொண்டு அடுத்த வாரத்திற்குரிய பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒரு நாளைக்கு மாத்திரம் மட்டுப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முற்பகல் தொடக்கம் நண்பகல் 12 மணி வரை மாத்திரம் பாராளுமன்றம் கூடும்.
சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மருத்துவ கட்டளைச் சட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு கட்டளைகள் அன்றைய தினம் விவாவதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூல பதிலைஎதிர்பார்த்து சமர்ப்பிக்கும் கேள்விகளுக்கான அமர்வு இடம்பெற மாட்டாது.
அதேவேளை, பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் தினத்தன்று பாராளுமன்ற உறுப்பினர்கள், அழைக்கப்பட்ட உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தவிர வேறு எவரும் பாராளுமன்றத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.