தேசிய அடையாள அட்டையின் தகவல்களை இணைய முறை ஊடாக உறுதிப்படுத்த ஆட்பதிவுத் திணைக்களம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை செயற்பாட்டிற்கு இந்தத் திட்டத்தை இடைக்காலத் தீர்வாக அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளதாகத் திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனம், அரச கூட்டுத்தாபனம், அரசியலமைப்பு சபை, அரசாங்கத்திற்கு இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் அல்லது எழுத்துபூர்வ சட்டத்தின் கீழ் இலங்கையில் நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களில் தேவைகளைப் பூர்த்தி செய்யும் போது வாடிக்கையாளரின் விருப்பப்படி மட்டுமே அடையாள அட்டை தகவல்களைச் சான்றளிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் வாடிக்கையாளர்களின் தகவல்களைச் சான்றளிப்பதற்காகக் குறித்த நிறுவனங்கள் ஆட்பதிவுத் திணைக்களங்களுடன் முழுமையான ஒப்பந்தத்திற்கு வர வேண்டும்.
தனிப்பட்ட அடையாளத்தை நம்பகத்தன்மையுடன் சரி பார்க்கவும், தேசிய அடையாள அட்டையைத் தவறாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பல்வேறு மோசடிகளைத் தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.