அநுரவின் அறகலய?

0
183

அடுத்த மாதம் 8ஆம் திகதி பிறிதோர் அறகலயவை ஆரம்பிக்கப் போவதாக தேசிய மக்கள் சக்தியின் (ஜே. வி. பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.
அரசாங்கம் தொடர்ந்தும் உள்ளூராட்சி தேர்தலை பிற்போட்டுவரும் நிலையில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட அனைவரும் ஜூன் 8ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவுக்கு முன்பாகக் கூடுமாறு அநுரகுமார திஸாநாயக்க அறிவித்திருக்கின்றார்.
சுயாதீன கருத்துக் கணிப்புகளின்படி, அநுரகுமாரவின் செல்வாக்கு இப்போதும் பிரகாசமாகவே இருப்பதாக நோக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சவால் விடும் ஒரு பிரதான வேட்பாளராக அநுரகுமார வெளித் தெரியலாம் என்னும் கணிப்புகள் காணப்படுகின்றன.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து அனைத்து நகர்வுகளையும் முன்னெடுத்து வருகின்றார்.
இந்த நிலையில், ரணில் தனக்கு சவாலான சூழல் ஒன்றை இல்லாமல் செய்வதற்காக எவ்வாறான விலையையும் கொடுப்பது பற்றி சிந்திக்க பின்நிற்கமாட்டார்.
ஆனால், ரணில் விக்கிரமசிங்கவுக்கு அடித்தள சிங்கள மக்கள் மத்தியில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய செல்வாக்கு இல்லையென்பதும் அனைவரும் அறிந்த விடயம்தான்.
இந்த நிலையில் சஜித் பிரேமதாஸவும் அநுரகுமார திஸாநாயக்கவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்களானால் ரணிலால் அடித்தள சிங்கள மக்களை நெருங்க முடியாது.
ஏனெனில், ரணிலால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களின் பலாபலன்களை சாதாரண மக்கள் முழுமையாக அனுபவிக்கவில்லை.
குறிப்பாக, அடித்தள சிங்கள மக்களின் வாழ்வில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய மாற்றங்கள் ஏற்படவில்லை.
இந்த நிலையில், ரணிலின் ஆற்றல் தொடர்பில் சாதாரண மக்கள் சிந்திக்கப் போவதில்லை.
பொதுவாக சாதாரண மக்கள் அரசியல்வாதிகளின் ஆளுமையை கருத்தில்கொண்டு வாக்களிப்பதில்லை.
ஆளுமை மத்தியதர வர்க்கத்துக்கு உரிய ஒன்று மட்டுமே.
சாதாரண மக்களைப் பொறுத்தவரையில் காலாதிகாலமாக சிங்கள மக்களை பிணைத்திருக்கும் சில சுலோகங்களை எவர் கச்சிதமாக உயர்த்திப் பிடிக்கின்றாரோ அவரையே தங்களின் தலைவராக சாதாரண மக்கள் கருதுவதுண்டு.
இவ்வாறானதொரு பின்புலத்தில் அநுரகுமார மீண்டுமோர் அறகலயவை ஆரம்பிக்கப் போவதாகக் கூறியிருப்பது கொழும்பு அரசியலில் மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.
இவ்வாறான அறகலயவின் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான சூழலை ஏற்படுத்துவதுதான்.
ஆனால், அவ்வாறானதோர் அறகலய ஏற்படுமாக இருந்தால் அதனை ரணில் எவ்வாறு எதிர்கொள்வார்? ஓர் அரசியல் கட்சி அறகலயவை ஆரம்பிக்கும்போது,
அது முன்னர் இடம்பெற்ற அறகலய போன்று வீரியமான ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை.
ஒருவேளை வீரியமான ஒன்றாக மாறினால் அது நிலைமைகளை தலைகீழாக்கலாம்.