நான் மக்களிடம் ஆணை கேட்டேன் ஆனால் நான் கேட்டளவிற்கு அவர்கள் ஆணையை தரவில்லை. மக்கள் ஆணை வழங்கியிருந்தால் நான் அரசியல் கைதிகளின் பிரச்சினையை தீர்த்து வைத்திருப்பேன் – அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பதில்தான் இது.
இதற்கு முன்னரும் பல சந்தர்பங்களில் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். திருகோணமலையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை – வாக்களித்திருந்தால் நான் உங்களுக்கு பல விடயங்களை செய்து தந்திருப்பேன் என்றவாறு தெரிவித்திருக்கின்றார். பிரச்சினைகள் தொடர்பில் டக்ளசிடம் செல்பவர்களிடம் அவர் இவ்வாறு புலம்புவதை ஒரு அரசியல் பிரச்சாரமாகவே கைக்கொண்டு வருகின்றார். ஆனால் அரசியலில் நீண்ட அனுபவமுள்ள டக்களஸ் தேவானந்தா இது தொடர்பில் தன்னை நோக்கியே கேள்விகளை கேட்க வேண்டும். ஏன் டக்ளஸ் கேட்ட ஆணையையை மக்கள் வழங்கவில்லை? ஏன் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள, குறிப்பிட்ட்டளவான மக்கள் மட்டுமே டக்களசுக்கு வாக்களித்து வருகின்றனர். இத்தனைக்கும் கடந்த அரசாங்கத்தை தவிர, முந்திய அரசாங்கங்களில் டக்ளஸ் தேவானந்தா பலமுள்ள அமைச்சராக இருந்த ஒருவர். அவர் பல வேலைத்திட்டங்களை யாழ்ப்பாண மக்களுக்கு பெற்றுக் கொடுத்ததாக கூறுகின்றார். அப்படியிருந்தும் ஏன் டக்ளஸ் தேவானந்தாவின் வாக்கு வங்கியில் குறிப்பிட்;டுச் சொல்லக் கூடியளவிற்கு வளர்சி ஏற்படவில்லை?
இப்படியான பல கேள்விகளுக்கான விடையை டக்ளஸ் கண்டடைய வேண்டும். ஒரு வேளை அவரால் இதற்கான பதிலை கண்டடைய முடிந்தால், அவர் எதிர்காலத்தில் இவ்வாறு மக்கள் தனக்கு ஆணைதரவில்லை என்று புலம்பவேண்டிய நிலைமை ஏற்பாடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தவிர்த்து வேறு எந்தவொரு தமிழ் கட்சியாலும் வடக்கு கிழக்கு தழுவியதாக பரவலான வாக்குகளை இதுவரையில் நிரூபிக்க முடியவில்லை. இதற்கான பதிலை சம்மந்தப்பட்ட ஒவ்வொரு கட்சிகளும் ஆராய வேண்டும். தங்களது பொருளாதார தேவைகளுக்கு அப்பாலும் மக்கள் வேறு சில விடயங்களை எதிர்பார்ப்பதால்தான் கூட்டமைப்பை நோக்கி, பெரும்பான்மையாக சாய்கின்றனர். அந்த தேவைகளை டக்ளஸ் பிரதிபலிக்காத காரணத்தினால்தான் டக்ளஸ் கேட்கும் ஆணையை மக்கள் வழங்கவில்லை.
மக்கள் தங்களுக்கு போதியளவு வாக்களிக்கவில்லை ஆகவே மக்களின் பிரச்சினைகளில் நாங்கள் கரிசனை எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று வாதிட முற்படுவது, அரசியல் ரீதியில் ஒரு முதிர்ச்சியான அணுகுமுறையல்ல. வாக்களிக்காத மக்களுக்கும் சேவை செய்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெற முயற்சிப்பதுதான் முதிர்ச்சியான அரசியல் அணுகுமுறை. அரசியல் கைதிகளின் பிரச்சினையில் தலையீடு செய்ய விரும்பினால் டக்ளஸ் அதனை செய்யலாம் அல்லது அவர்களில் அனேகர் விடுதலைப் புலிகளுக்கு விசுவாசமானவர்கள் அவர்களை எதற்காக நான் காப்பாற்ற வேண்டுமென்று டக்ளஸ் நினைத்தால் இந்த பிரச்சினையை விட்டுவிடலாம். ஆனால் மக்கள் ஆணை தரவில்லை, தந்திருந்தால் செய்திருப்பேன் என்று வாதிட முற்படுவது அரசியல் ரீதியில் தவறானது. அதுமட்டுமல்லாமல் அரசியல் கைதிகளின் குடும்பங்களையும் வேதனைக்குள்ளாக்கும் செயல்.
வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும், ஒரு தமிழ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரானவர், வடக்கு கிழக்கின் எப்பகுதியிலிருக்கும் மக்களின் பிரச்சினைகளையும் தனது பிரச்சினையாக கருத வேண்டும். மக்களில் வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என தீண்டைமை பார்ப்பதானது அரசியல் ரீதியில் தவறானது.
-ஆசிரியர்