ஆசியக்கிண்ண உதைபந்து தகுதிகாண் சுற்று கம்போடியாவை இன்று எதிர்கொள்ளும் இலங்கை

0
79

2027ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ண உதைபந்து தொடருக்கான தகுதிகாண் போட்டியில் இன்றைய தினம் இலங்கை அணி கம்போடியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் கொழும்பு குதிரைப்பந்தைய திடல் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகிறது. 

ஆசியக்கிண்ண தொடரின் ப்ளேஓவ் தகுதிகாண் ஆட்டத்தில் இலங்கை அணி கம்போடியாவுடன் இரு ஆட்டங்களில் விளையாடுகிறது. இதில் முதல் ஆட்டம் இலங்கையில் இன்று நடைபெறவுள்ளதுடன், அடுத்த ஆட்டம் கம்போடியாவில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த இரு ஆட்டங்களும் இலங்கைக்கு ஆசியக்கிண்ணத்தின் பிரதான தகுதிச்சுற்றில் ஆட முக்கியமானதாக அமைந்திருக்கிறது. 

இலங்கை அணி கம்போடியாவை எதிர்கொள்வது எட்டு ஆண்டுகளில் இது முதல் முறையாகும். கம்போடியாவுக்கு எதிரான போட்டிக்காக சுஜான் பெரேரா தலைமையில் 25 பேர் கொண்ட இலங்கை உதைபந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளராக குவைத் நாட்டைச் சேர்ந்த அப்துல்லா அல்முத்தைரி செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்: சுஜான் பெரேரா, ஹர்ஷ பெர்னாண்டோ, மொஹமட் ஆகிப், மொஹமட் ஹஸ்மீர், மொஹமட் அமான், பாரத் சுரேஷ், வசீம் ரசீக், ஆதவன் ராஜமோகன், ஒலிவர் கெலாட், சகாய் ஸ்டீவன், லியோன் பெரேரா, வேட் டக்கர், ஜேசன் தயாபரன், ஜக் ஹிங்கர்ட், கிளாடியோ மத்தியஸ், ஷெனால் சன்தேஷ், சாமுவேல் டர்ரன்ட், வொரன் பெரேரா, அனுஜன் ராஜேந்திரன், பிராஸ் மர்ஷூக், ஜூட் சுப்புன், மொஹமட் ரிப்கான், கவீஷ் பெர்னாண்டோ, மொஹமட் முர்சித், தனுக்க ரனவீர.