ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சம்பியன் கிண்ணத்தை வென்ற, இலங்கை அணிக்கு கொழும்பில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்ற நடப்பு வருடத்திற்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, 6வது முறையாகவும் ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணிக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
இலங்கை அணி, நாடு திரும்பும் போது வரவேற்பளிப்பதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக செய்யப்பட்டிருந்தன.
இலங்கை அணி வீரர்கள் தாம் கைப்பற்றிய ஆசியக் கிண்ணத்தோடு இன்று அதிகாலை கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உட்பட உயர்மட்ட அதிகாரிகள் பூமாலை அணிவித்து வரவேற்றனர்.
அத்தோடு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி இலங்கை அணி வீரர்கள் மக்கள் வெள்ளத்தில் வரவேற்பு வழங்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆசியக் கிண்ணத்தை வெற்றியீட்டிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர் பானுக ராஜபக்ச, ‘இலங்கைக்கு இது மிகவும் கடினமான காலம். மக்கள் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த நேரத்தில், அவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்’ என குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை அணி ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றியமை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சானக ‘கடந்த சில ஆண்டுகளாக எமது வீரர்கள் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர். ஆனால் துரதிஸ்டவசமாக நாங்கள் போட்டிகளில் வெற்றிபெறவில்லை. ஆனால் தற்போது வெற்றிப் பாதையில் நுழைந்துள்ளோம். எனவே இந்த வெற்றி எங்களுக்கு ஒரு நல்ல திருப்பு முனையாக இருக்கும் என நினைக்கின்றேன். இப்படியே தொடர்ந்தால் இன்னும் 5 அல்லது 6 ஆண்டுகளில் நாம் நல்ல நிலைக்கு வந்துவிடுவோம்’ என நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.