ஆப்கானில் மூன்று பெண்கள் உட்பட 12 பேருக்கு கசையடி தண்டனை!

0
228

ஆப்கானிஸ்தானில் உள்ள கால்பந்து மைதானம் ஒன்றில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் 3 பெண்கள் உட்பட 12 பேருக்கு சரமாரியாக கசையடி வழங்கப்பட்டுள்ளது.

பாலியல் தொழில், கொள்ளை மற்றும் ஓரினச்சேர்க்கை உள்ளிட்ட “தார்மீகக் குற்றங்களில் இந்த குழுவினர் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக தலிபான் அதிகாரி ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

மூன்று பெண்களும் தண்டனைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். ஏனையவர்களில் சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர், ஆனால் எத்தனை பேர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள லோகார் பிராந்தியத்தின் தலிபான் செய்தித் தொடர்பாளர் உமர் மன்சூர் முஜாஹித் தெரிவித்துள்ளார்.

ஆண்களும் பெண்களும் தலா 21 முதல் 39 கசையடிகள் பெற்றனர். ஒரு நபர் பெறக்கூடிய அதிகபட்ச கசையடிகளின் எண்ணிக்கை 39 ஆகும் என மற்றொரு தலிபான் அதிகாரி கூறியுள்ளார்.

வடக்கு ஆப்கானிஸ்தானின் தகார் மாகாணத்தில் கடந்த வாரம் இதேபோன்ற கசையடியால் 19 பேர் தண்டிக்கப்பட்டனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்லாமிய ஷரிஆ சட்டத்தின்படி, சில குற்றங்களுக்கு தண்டனைகளை அமுல்படுத்துமாறு தலிபான்களின் உயர் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா நீதிபதிகளுக்கு கடந்த வாரம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஒரு வாரத்தின் பிறகு லோகார் மாகாணத்தில் இந்த கசையடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தில் பொது மரண தண்டனை, உடல் உறுப்புகளை வெட்டுதல் மற்றும் கல்லெறிதல் ஆகியவையும் அடங்கும்.

இருப்பினும், சரியான குற்றங்கள் மற்றும் அதற்கான தண்டனைகள் தலிபான்களால் அதிகாரப்பூர்வமாக வரையறுக்கப்படவில்லையென பிபிசி தெரிவித்துள்ளது.