26 C
Colombo
Saturday, April 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது…!

புதிய அரசியலமைப்பு விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மைக்காலமாக அடிக்கடி பிரஸ்தாபித்துவருகின்றார்.
இது குறித்து அவர் அண்மையில் தன்னைச் சந்தித்த கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர்களுடன் கருத்து தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்த குழுவின்
அறிக்கையின் பிரகாரம் அடுத்த ஆண்டுக்குள் புதிய அரசமைப்பு சட்டத்தைக் கொண்டுவருவேன் என்று தெரிவித்திருந்தது குறித்து இந்தப் பத்தியிலும் குறிப்பிட்டிருந்தேன்.
அந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி தமக்கு வழங்கிய உறுதிமொழி பற்றி பிரஸ்தாபித்திருந்தனர்.
அதன் பின்னரே பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அந்தக் கருத்துகளின் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், யாழ் மாவட்ட எம். பி., சுமந்திரனும் அதனை வரவேற்றிருந்ததுடன், தமது முழுஒத்துழைப்பு கிடைக்கும் என்றும் உறுதியளித்திருந்தனர்.
ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்தபோது பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றி புதிய அரசியலமைப்பை தயாரிக்க ஐந்து ஆண்டுகள் முயன்று கடைசியில் தயாரிக்கப்பட்ட வரைவுக்கு என்ன நடந்தது? ஏன் அதிலிருந்து தொடங்குமாறு கூட்டமைப்பினர் கேட்கவில்லை என்றும் இந்தப் பத்தியில் நேற்று முன்தினம் கேள்வி எழுப்பியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
அவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தது, எதற்காக என்பது குறித்து இந்த ஊர்க்குருவி சில விடயங்களை பகிரங்கமாக எழுதாவிட்டாலும், இப்போது அந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டதால் அதுகுறித்து கேள்வி எழுப்பாமல் இருக்கமுடியவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமங்க தன்னைச் சந்தித்த கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர்களிடம் கோட்டாபய நியமித்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே புதிய அரசியலமைப்பை கொண்டுவரப்போவதாகவே தெரிவித்திருந்தார்.
அந்தக் குழு நீண்டகாலமாக இதுகுறித்து ஆராய்ந்ததுடன், அநேகமாக அனைத்துக் கட்சிகளிடம் இருந்தும் ஆலோசனைகளையும் பெற்றே தமது இறுதி அறிக்கையை தயாரித்திருந்தது.
அந்த அறிக்கை அப்போதைய ஜனாதிபதி கோட்டாபயவிடம் கையளிக்கப்பட்டிருந்தபோதிலும் அது பகிரங்கப்படுத்தப்படவில்லை.
அதற்கு அப்போது இருந்த நிலைமைகளும் காரணமாக இருக்கலாம்.
பொருளாதார நெருக்கடியால் நாடு அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அந்த அறிக்கையை பகிரங்கப்படுத்துவது பொருத்தமானதாக இருக்காது என்று அவர் கருதியிருக்கலாம்.
ஆனால், நேற்றைய தினம் ‘ஈழநாடு’வில் பனங்காட்டான் அந்த அறிக்கையில் இருந்து கசிந்த விடயங்கள் சிலவற்றை கோடிட்டுக் காட்டியிருந்தார்.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழான பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை நீக்க வேண்டும் – அதாவது இந்த முறைமைக்கு மக்கள் ஆதரவில்லையென்று குழுவின் பெரும்பான்மை
உறுப்பினர்கள் அபிப்பிராயம் கொண்டுள்ளனர் என்று இந்த அறிக்கை சுட்டியுள்ளது.
அனைத்து மக்களும் சமத்துவமாக இருப்பதற்கு மாகாண சபை முறைமை குந்தகமாக உள்ளது என்ற கருத்து இங்கே வலியுறுத்தப்பட்டுள்ளது.
இக்குழுவில் இடம்பெற்ற ஒரேயொரு தமிழரான சட்டப் பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் மட்டுமே மாகாண சபை தக்கவைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இதுவே பனங்காட்டான் வெளிக்கொண்டுவந்த அந்த அறிக்கையின் முக்கியமான விடயம்.
பனங்காட்டான் இந்த மாகாண சபைகளோ அல்லது பதின்மூன்றாவது திருத்தமோ தமிழர்களின் பிரச்னைகளுக்கு எந்த வகையிலும் தீர்வாகாது என்ற கருத்தைக் கொண்டவர்.
ஆனாலும், அவர்கூட அந்த புதிய வரைவில் அது கூட இல்லாமல்தான் இருக்கப்போகின்றது என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே அதனைக் குறிப்பிட்டிருப்பார் என்று நினைக்கின்றேன்.
நேற்று முன்தினம் இந்தப் பத்தியில் சுட்டிக்காட்டியது போன்று, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட சமஷ்டிக்கான பெயர் இல்லாவிட்டாலும் சமஷ்டி கட்டமைப்பைக் கொண்ட அந்த வரைவை இறுதிசெய்ய வேண்டும் என்ற
கோரிக்கையை அதன் தயாரிப்பில் ஈடுபட்டவர்களான நமது கூட்டமைப்பினர் வலியுறுத்தவேண்டும்.
அல்லது ஜனாதிபதி சட்டத்தரணியான மனோகர டி சில்வா தலைமையிலான அந்தக்குழுவின் அறிக்கையை முதலில் பகிரங்கமாக வெளியிடுமாறு வலியுறுத்தி, அதன் யோசனைகளை அறிந்து எதிலிருந்து தொடங்குவது என்பதைத் தீர்மானிக்க
வேண்டும்.
அதைவிடுத்து, ஜனாதிபதியின் புதிய அரசமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குகின்றோம் என்று அறிவித்துவிட்டு.
காலம் கடத்தும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவது எந்த வகையிலும தமிழ் மக்களுக்கு உதவப்போவதில்லை.
இவற்றைச் செய்யாதவிடத்து, கடைசியாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழர் பிரச்னையை வடக்கின் பிரச்னையாக மாற்றியது போல, அல்லது அவர் குறிப்பிட்ட அந்த கைதிகள் விடுதலை, காணாமல்
ஆக்கப்பட்டோர் விவகாரம், அபிவிருத்தி செயல்பாடுகளுடன் தமிழ் பிரச்னைக்கு ‘தீர்வு’ காணப்பட்டுவிடும்.!

  • ஊர்க்குருவி

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles