இன்றைய இந்தப் பத்தியை நான் எழுதப் போவதில்லை.
எழுதப் போகின்றவர் உங்கள் எங்கள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒருவர்.
உங்களில் பலர் இதனை படித்தும் இருக்கலாம்.
ஆனாலும் இது ஒரு பதிவாக இந்தப் பத்தியில் வரவேண்டும் என்று இந்த ஊர்க்குருவி விரும்பியதால் இங்கே மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.
அண்மையில், கொழும்பில் நடைபெற்ற மணவைத்தம்பியின் புதல்வர் மணவை அசோகனின் மணிவிழாவில் கலந்துகொண்டு தான் சொன்ன கருத்தை அவர் தனது முகநூலில் பதிவுசெய்திருந்தார்.
அதனை இங்கே அப்படியே தருகின்றேன்.
‘சும்மா கலைஞர் கருணாநிதியை கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள்! இலங்கையில் தமிழர்களின் எல்லா இழப்புகளுக்கும் தமிழக அரசியல்வாதிகளையும் இந்திய தலைவர்களையும் காரணமாகக் காட்டுவதை நிறுத்துங்கள்! இலங்கையில் தமிழர்கள் கண்டுவிட்ட இழப்புகளுக்கு முதற்காரணம் இலங்கை தமிழ் அரசியல் மேதைகள்.
இரண்டாவது காரணம், கொலைகார சிங்கள பேரினவாத அரசுகள்.
1940களில் கண்டிய சிங்கள தலைமைகளே தர வந்த சமஷ்டியை எட்டி உதைத்து யார்? 65:35 என்ற ஜன பரம்பலுக்கு, நியாயமே அற்ற 50:50 என்ற கோதாரி கோரிக்கையை முன் வைத்து, பிரிட்டிஷ்காரனே கைவிரிக்கும் நிலைமையை ஏற்படுத்தியது யார்? 1987இல் வடக்கு – கிழக்கு மாநிலம் என்ற அடிப்படையை ஆரம்பித்து வைத்த, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை, மாகாண சபைகளை எட்டி உதைத்தது யார்? இன்று, ‘பிச்சை வேண்டாம், நாயை பிடி!’ என்று, 13ஐ யாவது முழுமையாக அமுல் செய்யுங்களேன் என ஓலமிடுவது யார்? இந்திய நாட்டு பிரதமராக இருந்த – இருக்கவிருந்த, ராஜீவையே போட்டு தள்ளி விட்டு இப்போது இந்திய அரசு தலைவர்களிடம் அதிகாரிகளிடம் கோரிக்கை மேல் கோரிக்கை வைப்பது யார்? இன்றும்கூட சகோதர முஸ்லிம் மக்களின் தேசிய அபிலாசைகளை உள்வாங்காமல், வடக்கு – கிழக்கு இணைப்பு என நிபந்தனை விதிப்பது யார்? கருணாநிதியும் இந்தியத் தலைவர்களும் அதி உத்தமர்கள் என நான் கூற வரவில்லை.
கருணாநிதியை கருணை நிதி என நான் கூறவில்லை.
ராஜீவ் காந்தியை மகாத்மாகாந்தி என நான் கூற வரவில்லை.
ராஜீவ் அனுப்பி வைத்த ஐ. பி. கே. எவ். இங்கே கொலைகள், பாதகங்கள் செய்யவே இல்லை என நான் கூற வரவில்லை.
ஆனால், தமது ‘தேச நலன்கள்’ அவரவருக்கு முக்கியம் என்பதும், இந்தியர்கள் எமக்காக வரக்கூடிய தொடுவானம் எதுவரை என்பதும் நமது அரசியல் மேதைகளுக்கு விளங்கி இருந்திருக்க வேண்டும் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, எம். ஜி. ஆரோ, இன்று ஸ்டாலினோ தமக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தும் எட்டு கோடி தமிழருக்குதான் முதலில் பொறுப்புக்கூறக் கடமைபட்டுள்ளார்கள்.
இதிலும்கூட, கருணாநிதி இலங்கை தமிழருக்காக இரண்டு முறை தனது ஆட்சியை இழந்தார் என்பது இங்கே எத்தனை மேதைகளுக்கு ஞாபகம் இருக்கிறது? ஆகவே, சும்மா கலைஞர் கருணாநிதியை கரித்துக் கொட்டுவதை நிறுத்துங்கள்! முதலில் சுயவிமர்சனம் செய்ய ஆரம்பியுங்கள்! விடை கிடைக்கும்!! நான் சும்மா ஊருக்கு உபதேசம் செய்யவில்லை.
அனுபவத்தைப் பகிர்கிறேன்.
எனக்குப் பின்னடைவு ஏற்பட்டால் காரணத்தை எனக்குள்ளேதான் நான் தேடுகிறேன்.
வரலாறு எனக்கு இதை கற்றுக் கொடுத்திருக்கின்றது.
ஆகவே, விடை கிடைக்கிறது.’
இதுவே, அந்த தலைவர் ஆற்றிய உரை.
இந்த உரையை ஆற்றக்கூடிய துணிவும் நெஞ்சுரமும் யாருக்கு இருக்கும் என்று தெரிந்தவர்களுக்கு அவர் பெயரைக் குறிப்பிடவேண்டும் என்பதல்ல.
ஆனாலும், தெரியாதவர்களுக்காக, இந்த வரிகளுக்கு சொந்தக்காரர், மனோ கணேசன் மட்டுமே.!
- ஊர்க்குருவி