31.1 C
Colombo
Monday, April 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது

ஜே. வி. பி. என்ற மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இந்தியாவுக்கு பயணம் செய்திருந்தமை பற்றி முன்னரும் இந்தப் பத்தியில் எழுதியிருந்தோம்.
இந்தியா, இலங்கையுடன் செய்துகொள்ள விரும்பும் ‘எட்கா’ உடன்படிக்கை தொடர்பாக ரணிலின் இந்த ஆட்சிக் காலத்திற்குள்ளாகவே அதனைச் செய்து கொள்ள முயற்சி செய்வது குறித்தும் அதற்கு ஜே. வி. பியிடமிருந்து எதிர்ப்பு வருவதைத் தடுப்பதும் அவர்களை இந்தியாவுக்கு அழைத்ததற்கான காரணமாக இருக்கலாம் என்றும் எழுதியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
அவ்வாறு எழுதிய பின்னர், எட்கா குறித்த விடயங்கள் தீவிரமடைந்திருப்பதையும் அதாவது, அதனை செய்து கொள்ள இந்தியா அதிக ஆர்வம் காட்டிவருவது பற்றிய செய்திகளும் வெளிவந்த வண்ணமுள்ளன.
இந்தவேளையில், பௌத்தர்களின் புனித தலங்களில் ஒன்றான மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குனுவெவே தம்மரத்ன தேரர் ஒரு தகவலை பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.
அண்மையில், இந்தியாவுக்கு சென்ற ஜே. வி. பியினருக்கு இந்தியா முந்நூறு கோடி ரூபாயை தேர்தல் செலவுக்காக வழங்கியது என்பதுவே அது.
ஜே. வி. பி. தலைவர்கள் தமது இந்திய பயணத்தின் போது, குஜராத் மாநிலத்துக்கும் சென்றிருந்தனர்.
அது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் என்பதற்கு அப்பால் அங்கு அவர்கள் விஜயம் செய்ததற்கு மற்றுமொரு விசேட காரணமும் உண்டு.
‘அமுல்’ என்பது இந்திய மாநிலமான குஜராத்திலுள்ள ஆனந்த் எனும் ஊரைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஆனந்த் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஆகும்.
இந்த நிறுவனம் 1946ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
தற்பொழுது சுமார் மூன்று மில்லியன் பால் உற்பத்தியாளர்களை உள்ளடக்கிய ஜி. சி. எம். எம். எவ். எனப்படும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின்கீழ் இயங்கி வருகிறது.
அமுல் என்பதற்கு சமஸ்கிருத மொழியில் ‘விலை மதிப்பற்றது’ என்பது பொருளாகும்.
வணிக நடவடிக்கைகளாகிய பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்கிறது.
அமுலின் வெற்றியைத் தொடர்ந்து இதே மாதிரியைக் கொண்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ் நாட்டில் இயங்கி வரும் ‘ஆவின்’ எனப்படும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அமுலை முன்மாதிரியாகக் கொண்டது ஆகும்.
இந்த அமுல் நிறுவனத்தின் தலைமையகத்தையும் நமது ஜே. வி. பி. தலைவர்கள் தமது பயணத்தின்போது சென்று பார்த்திருந்தனர் என்பது கூடுதல் தகவல்.
அந்த அமுல் நிறுவனம் தான் இலங்கை அரசுக்கு சொந்தமான கால்நடை பண்ணைகளை நீண்டகால குத்தகைக்கு பெறவிருக்கின்றது.
சுமார் நாற்பத்தி எட்டு ஆயிரம் ஏக்கர் விஸ்தீரணமுள்ள பண்ணைகள் இனி இந்த அமுல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வரவிருக்கின்றன.
தற்போது, அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் குழு ஒன்று, இலங்கையில் தங்கியிருந்து நமது அரச பண்ணைகளுக்கு சென்று மதிப்பீட்டு பணியை நிறைவு செய்துள்ளன.
இனி என்ன? அந்த பண்ணைகள் கைமாறுகின்ற போதும் நமது சிவப்பு தோழர்கள் அமைதியாக அதனைக் கடந்து செல்வார்கள்.
இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கின்றது? நமது குறிக்கோளை அடைய வேண்டும் என்றால், இது போன்ற விட்டுக்கொடுப்புக்களைச் செய்துதான் ஆக வேண்டும்.
அதுவல்ல எமக்கு உறுத்துகின்ற முக்கிய விடயம்.
அரசாங்கம் தனது பண்ணைகளை நிர்வகிக்கத் தெரியாமல், (அமுல் அதனை நிர்வகிக்கத்தயாராக இருக்கின்றது என்றால் ஏன் எம்மால் முடியாது?) இந்திய நிறுவனத்துக்கு வழங்குகின்றது சரி.
ஆனால், மிக வெற்றிகரமாக பால் உற்பத்தியில் ஈடுபட்டு- நமது பால் தேவைக்கு முக்கிய பங்காற்றிவரும் மட்டக்களப்பு பால் உற்பத்தியாளர்களின் மேய்ச்சல் தரைகளை அடாத்தாக ஆக்கிரமித்து – அந்த பால் உற்பத்திக்கு சமாதி கட்டிக்கொண்டிருக்கின்ற மயிலத்தனை நெருக்கடி பற்றி -அங்கே கால்நடைகள் விஷம் வைத்தும் – வெடி வைத்தும் கொல்லப்படுவது பற்றி நமது சிவப்பு தோழர்கள் இதுவரை வாயே திறக்கவில்லையே எதற்காக? அதுவும் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்ற ஆசையினால் தானா?

  • ஊர்க்குருவி.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles