25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது!

தமிழக முதல்வராக செல்வி ஜெயலலிதா முதல் தடவையாக பதவியிலிருந்து, அடுத்த தேர்தலில் கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதாமீது ஊழல் புகார். வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்தாரென புகார்கள் கிளப்பப்பட்டன. அதற்குக் காரணம் வேறு ஒன்று மல்ல, அவர் ஊழல் செய்ததை பகிரங்கமாக செய்ததுதான். அந்த ஐந்து ஆண்டுகளில் அவர் சேர்த்த சொத்துகளைவிட அதிக சொத்துகளை கருணாநிதிதான் முதல்வராக இருந்தபோது சேர்த்திருந்தாலும் அவர் தனது மருமகன் முரசொலி மாறனை வைத்து ஒரு ‘தேர்ச்சி பெற்ற ஊழல்வாதிபோல’ அவற்றைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் ஊழல் செய்து சொத்துச் சேர்த்திருந்தார். ஆனால், ஜெயலலிதாவோ முன் அனுபவமில்லா ததால், செய்ததை மற்றவர்கள் கண்டுபிடிக்கும் வகையில் செய்தார். அதனால்தான் அவர் செய்த ஊழல்கள் பேசுபொருளாகின.

அதுபோலத்தான், நமது அரசி யல்வாதிகளில் சிலரும் தாம் செய்த சில விடயங்களுக்கு தடயங்களை விட்டுவைத்துவிட்டு மாட்டிக் கொண்டு முழிக்கின்றனர். விக்னேஸ்வரன் ஐயா, ஒருவருக்கு மதுபான விற்பனை சாலைக்கு அனுமதி பெற்றுக் கொடுப்பதற்காக சிபார்சுக் கடிதம் கொடுத்து மாட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால், அவ்வாறு மதுபானசாலைகளுக்கு அனுமதி பெற்றுக் கொடுத்த பலர் எதுவித சலனமும் இல்லாமல் இருக்கின்றனர். அதற்காக அவர்கள் அதுபோன்ற மதுபானசாலைகளுக்கு அனுமதி பெறவில்லை என்பதல்ல, எந்த ஆதாரமும் இல்லாமல் செய்திருக்கிறார்கள். அவர்கள் பெயரிலோ அல்லது அவர்கள் குடும்பத்தினர் பெயரிலோ இருந்தால் தானே நீங்கள் கண்டுபிடிப்பதற்கு.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர், தனது பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஒருவரின் உறவினர் பெயரிலும் எடுத்திருக்கிறார். அதற்காக அவர் எந்த சிபார்சு கடிதத்தையும் கொடுக்கவில்லை. நேரடியாக லைசன்ஸ் பெறுபவரின் விண்ணப்பத்துடன் அவரையும் அழைத்துக் கொண்டு மதுவரித் திணைக்களத்துக்கு சென்று ஆணையாளர் நாயகத்தை சந்தித்து பெற்றுக்கொடுத்திருக்கிறார். இங்கே அவர் அதில் சம்பந்தப்பட்டமை அந்த ஆணையாளர் நாயகத்துக்கு மாத்திரமே தெரிந்த சங்கதி. எங்கும் அவர் சம்பந்தப்பட்ட விபரம் இல்லை.

அதனால் அவர் மற்றையவர்களின் விபரங்களை வெளியிடவேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கின்றார். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் எனக்குத் தெரிந்த எம். பி. ஒருவர் போன் பண்ணிக் கேட்டார், ‘உங்களுக்கு ஏதாவது வீதி திருத்த வேண்டி இல்லையா?’ என்று. அப்படியொரு தேவையும் எனக்கு இல்லாதபோதும் வருவதை எதற்கு விடுவது என்று நண்பர் ஒருவரின் வீடு இருக்கும் சின்ன ஒழுங்கை ஒன்றை செப்பனிடுவோமே என்று, நண்ப ரிடம் கேட்டு, அவர் வீதியின் பெயரை அந்த எம். பியிடம் கொடுத்து அதனை செப்பனிட்டது இப்போது ஞாபகத்துக்கு வந்தது.

எனக்கு ஓர் எம். பியை தெரிந்திருந்ததால் நண்பர் ஒருவரின் வீடு இருந்த வீதியை செப்பனிட முடிந் தது. அதற்காக எல்லா வீதிகளும் செப்பனிடப்படவில்லையே. இதுபோல, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எம். பிக்களுக்கு மதுபானசாலைகள் திறப்பதற்கு அனுமதி கொடுக்கிறார் என்றால், அந்த வியாபாரத்தில் ஈடுபட விரும்புகின்ற ஒருவருக்கு அதற்கான அனு மதியை ஓர் எம். பி. எடுத்துக்கொடுப்பதில் என்ன தவறு இருக்கின்றது என்பதுதான் புரியவில்லை. இதில் கவனிக்கவேண்டியது, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது அவருக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டே அவர் இது போன்ற சலுகையை வழங்கியிருக்கலாம். ஆனால், நமது எம். பிக்களில் சார்ள்ஸ் நிர்மலநாதனும் வினோ நோகராதலிங்கமும் மாத்திரமே ரணிலை பகிரங்கமாக ஆதரித்தவர்கள். ஏனையவர்கள் பொது வேட்பாளரையோ அல்லது சஜித் பிரேமதாஸவையோதான் ஆதரித்தார்கள்.

அப்படியெனில், ரணில் எதற்காக இந்த மதுபானசாலை அனுமதிகளை இவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும்? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ரணிலுக்கு ஆதரவு வழங்கியவர்கள் டக்ளஸ் தேவானந்தாவும் அங்கஜன் இராமநாதனும் கிழக்கில் பிள்ளையானும் வியாழேந்திரனும் தான். தனக்கு ஆதரவு வழங்குகிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு வழங்கியிருந்தால், அது இலஞ்சம் என்று கருதலாம். ஆனால், வடக்கில் தனக்கு ஆதரவு வழங்காதவர்களுக்கும் அவர் அனுமதிப் பத்திரத்தை வழங்கினார் என்றால், அது எந்த வகைப்பட்டது என்பது தெரியவில்லை. ஏற்கனவே, ஒரு தடவை இந்தப் பத்தியிலும் எழுதியிருந்தேன். இரண்டாயிரத்து பதினைந்து வரை எம். பிக்களுக்கு கார்களை இறக்குமதி செய்வதற்காக தீர்வையற்ற ‘பெர்மிற்’ கள் வழங்கப்படுவதுண்டு. அது அவர்கள் கார்களை வாங்கி தமது மாவட்டத்தில் மக்கள் பணியாற்றுவதற்காக ஓடித்திரிவதற்காகத்தான்.

கார்கள் மாத்திரமல்ல. பின்னர் அவர்கள் ஓடி ஓடி பணியாற்றுவதற்காக எரிபொருளுக்கும் பணம் வழங்கப்படுவதுண்டு. ஆனால், நமது எம். பிக்கள் அனைவரும் தமக்குக் கிடைக்கும் ‘பெர்மிற்’றை யாராவது ஒருவருக்குக் கொடுத்து இரண்டு கோடி முதல் மூன்று கோடி ரூபாய் வரை இலாபம் பார்த்து விடுகின்றனர். அப்போதெல்லாம் அது பற்றிக் கண்டுகொள்ளாத நாம். இப்போது அவர்கள் ‘பார் பெர்மிற்’ எடுத்து விட்டார்கள் என்று குத்திமுறிவது எதற்காக என்பதுதான் புரியவில்லை. இதோ யார் யார் எல்லாம் ‘பார் லைசன்ஸ்’ பெற்றார்கள் என்ற விபரம் கிடைத்துவிட்டது.

தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாட்களில் விபரம் வெளியிடப்படுகின்றது என்று அவரவருக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இவையெல்லாம் மக்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்கப்போவதில்லை. ஆனாலும் ஜெயலலிதா ஊழல் செய்ததுபோல ஆதாரங்களை வைத்துக்கொண்டு ஊழல் செய்தவர்கள்தான் அச்சமடையவேண்டும். அதாவது, அந்த லைசன்ஸை பெற்றுக் கொடுப்பதற்காக பல கோடிகளை வாங்கியவர்கள், அதற்காக சட்டத் தரணியை வைத்து ஒப்பந்தம் செய்தவர்கள்தான் பாவம். ஆனால், அப்படி இல்லாமல் யாருக்காவது உதவியாக மதுபான சாலைகளுக்கு அனுமதி பெற்றுக்கொடுத்திருந்தால், அவர்கள் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு இருக்கலாம்தான்.

-ஊர்க்குருவி.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles