தமிழகத்தில் தேர்தல் நடைபெறு கின்ற காலங்களில் எல்லாம் நடிகர் ரஜினி காந்த் யாருக்கு ஆதரவு என்பதில் போட்டி நடக்கும். அவர் யாரை ஆதரிக்கிறார் என்பதை அறிந்தால், அவரின் இலட்சக்கணக்கான இரசிகர்களும் அவர் போலவே தம்மை ஆதரிப்பார்கள் என்று கட்சிகள் கருதுவதுண்டு. ஒரு தேர்தலில் அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை இரகசியமாக கமெராவில் பதிவுசெய்து அது உடனே ஊடகங்களில் வெளியாகி பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
அந்தத் தேர்தலில் அவர் இரட்டை இலைக்கு ( ஜெயலலிதாவின் அண்ணா தி. மு. க. ) வாக்களித்ததாக தெரியவர, அந்தத் தேர்தலில் ஜெயலலிதா அமோக ஆதரவுடன் வெற்றிபெற்றது இதற்கு காரணமாக இருக்கலாம். இலங்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸநாயக்க, வெற்றிபெற்றதும் அதாவது, இதற்கு முந்திய தேர்தல்களில் எல்லாம் மூன்று வீத வாக்குகளுடன் இருந்த அவரின் கட்சி, ஒரே பாய்ச்சலில் நாற்பத்தி இரண்டு வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதும் அவரது ‘இமேஜ்’ நாடு முழுவதும் மக்களை- குறிப்பாக இளைஞர்களை ஆகர்சிக்கப்பண்ணியிருக்கின்றது.
சிங்கள தேசிய உடையில் அல்லது ஆங்கில தேசிய உடையில் மாத்திரமே நாட்டின் தலைவரை இதுகாலவரை பார்த்து வந்த மக்களுக்கு ஒரு சாதாரணன் அந்த உச்ச பதவியில் அமர்ந்தமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியதும் அவர்மீது இளையவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதற்குக் காரணமானது. அதனால்தான், அவர் பற்றியே இப்போது தேர்தல் மேடைகளில் பேசப்படுகின்றது. தொண்ணூறுகளில் இதேபோலத்தான், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதும் மக்களுக்கு ஓர் ஈர்ப்பு இருந்தது.
அதனால்தான் சந்திரிகா சாறி, சந்திரிகா சட்டை என்று ஒவ்வொன்றிலும் சந்திரிகா பேசப்பட்டார். இன்று அநுரமீதான இந்த அலை எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது இன்று சொல்லக்கூடியதல்ல, ஆனாலும் இந்தத் தேர்தலில் அது தீவிரமாக வேலை செய்கின்றது. அதனால்தானோ என்னவோ நமது தலைவர்கள் சிலரும் அநுரவுடன் தமக்கு நெருக்கம் என்பதுபோலவும் அவர் ஆட்சி யில் தாங்களும் முக்கிய பதவிகளில் இருப்போம் என்பதுபோலவும் ‘கதைவிடத்’ தொடங்கியிருக்கின்றனர். தோழர் அநுரகுமார ஜனாதிபதியாக பதவியேற்றதும் வடக்குக்கு ஒரு முக்கிய பதவிக்கு நியமிக்கப்பட்டவர்.
ஏற்கனவே, தமிழ் அரசின் மேடைகளில் காணப்பட்ட ஒருவர். அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் பேசப்பட்டது. ஆனால், அவர் அந்த முக்கிய பதவிக்கு நியமிக்கப்பட்டதும் அவரை அந்தப் பதவிக்கு ‘இவரே’ சிபார்சு செய்திருக்கிறார் என்று அவரே அரசல்புரசலாக செய்தியை கசிய விட்டார். ஆனால், அது ஜே. வி. பியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரின் தெரிவு என்று பின்னர் தெரியவந்தது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தயாரிக்கப்பட்டு நின்றுபோன புதிய அரசமைப்பு முயற்சியை தமது அரசு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது, தமிழ் மக்களுக்கு பரிச்சயமான பாசையில் சொல்வதெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மறைந்த சம்பந்தன் ஐயா ஒவ்வொரு தீபாவளியிலும் அடுத்த தீபாவளிக்கு வந்துவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்த ‘எக்க ராஜ்ய’ அரசமைப்பை நிறைவுசெய்வதையே முன்னெடுக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால்தான், அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்த தமிழ் அரசின் பேச்சாளர் சுமந்திரன், அதுகுறித்து ஜனாதிபதியை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார். அதாவது, புதிய அரசாங்கம் அந்த அரசியலமைப்பு வரைவை முழுமைப்படுத்தி – அமுல்படுத்த விரும்புகின்றது என்றும் அதற்கு தமிழ் அரசு தனது ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் தெரிவித்தது எதனால் என்பது நமக்கு புரியாததல்ல.
அதாவது அப்படி புதிய அரசாங்கம், தானும் ஜயம்பதியும் இணைந்து தயாரித்த புதிய அரசமைப்பு முயற்சியை நிறைவு செய்யவிருக்கின்றது என்றால், தானும் இந்த வேளையில் பாராளுமன்றத்தில் இருக்கவேண்டியது அவசியம் என்ற செய்தியை அவர் மறைமுகமாக சொன்னார் என்பதைப் புரிந்துகொள்ள அதிகம் ஆராய்ச்சி செய்யவேண்டிய தில்லை. ஆனால், அரசமைப்பு முயற்சியை முழுமைப்படுத்த பாராளுமன்றத்துக்குள் இருக்கின்றவர்கள் மாத்திரம் பணியாற்றப்போவதில்லை. அடுத்த பாராளுமன்றம் அதனை நிறைவேற்ற வேண்டுமே தவிர, அதனை பாராளுமன்றத்தில் இருப்பவர்கள்தான் முழுமைப்படுத்த வேண்டும் என்பதல்ல.
இந்தச் செய்தி வெளியானதும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஒரு கோரிக்கையை விடுத்தார். ‘ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தலைமையிலான அரசுடன் பேச்சு நடத்தி நாட்டில் தீராத இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வை பெற்றுத் தருவோம். அதற்கான ஆணையைத் தமிழ் மக்கள் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் வழங்க வேண்டும்’ என்பதே அந்தக் கோரிக்கை. ஆனால், அதனையே ‘தங்களையும் தமிழ் அரசு கட்சியில் உள்ள ஆளுமைமிக்கவர்களையும் தெரிவு செய்யவேண்டும்’, என்று அவர் கோரினாரென செய்திகள் வெளியாகின.
ஆனால், அதுகுறித்து ஒரு தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் அவர், ‘தமிழ்த் தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஆளுமையுள்ளவர்கள் வடக்கு, கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்துக்கு வரவேண்டும். வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாங்களும் நிச்சயமாக பாராளுமன்றம் செல்வோம். நாங்கள் அனைவரும் கரம் கோத்துக்கொண்டு சிநேகபூர்வமான முறையில் அநுர அரசுடன் பேச்சு நடத்தி நாட்டில் தீராத இனப்பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வைப் பெற்றுத்தருவோம்.’ என்று கூறியுள்ளார். ஆளுமை என்று அவர் எதனைக் குறிப்பிடுகின்றார் என்பது தெரியவில்லை. ஆனால், ஆளுமை மாத்திர மல்ல. எமது கொள்கைகளில் உறுதியாக இருக்கக்கூடியவர்களையே மக்கள் பாராளுமன்றம் அனுப்பவேண்டும். தமக்கு வேண்டியவர்கள் ஆட்சியில் இருந்தால் – அவர்களுக்கு முண்டு கொடுப்பதும், அவர்களுக்கு தெற்கில் நெருக்கடி வராமல் நமது தீர்வை கேட்கவேண்டும் என்று நினைப்பதும் தமிழ்த் தேசிய ஆளுமை அல்ல.
-ஊர்க்குருவி