இப்போதாவது புரிகிறதா?

0
320

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். அதே போன்று ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்திருக்கின்றனர். ஆனால் கட்சிகளின் தலைவர்கள் எதிராக வாக்களித்திருக்கின்றனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருக்கும் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் முன்னைநாள் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், தாங்கள் வாக்களிக்காமல், தங்களது கட்சியினரை கொண்டு 20வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். இதில் இரண்டு கட்சிகளின் தலைவர்களும் இரட்டை வேடம் போடுவதான சந்தேகம் எழுந்திருக்கின்றது. 20இற்கு ஆதரவளித்த தங்கள் உறுப்பினர்கள் மீது இரண்டு கட்சிகளும் நடவடிக்கை எடுக்கத் தவறினால், இரண்டு கட்சியினருடனும் கூட்டமைப்பு இணைந்து பயணிப்பதிலும் சிக்கல் உருவாகும் என்று சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

20வது திருத்தச்சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தவர்களில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கிமும் ஒருவர். ஆனால் இன்று அவர் வெளியிலிருக்க, அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20வதை ஆதரித்திருக்கின்றனர். அதே போன்றுதான் ரிஷாட ;பதியுதீனின் நிலையும். தமிழ் வெகுசனப்பரப்பில் இதனை எவராவது ஆச்சரியமாகப் பார்த்திருப்பார்களா? அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான். ஏனெனில் முஸ்லிம் அரசியல் வாதிகள் காலத்திற்கு காலம் எடுக்கும் அரசியல் நகர்வுகளை அறிந்தவர்கள் எவருமே முஸ்லிம்களின் 20வது திருத்தத்திற்கான ஆதரவு தொடர்பில் ஆச்சரிப்படமாட்டார்கள். சுமந்திரன் ஏன் இதில் ஆவேசப்பட்ட வேண்டும்? ஓருவேளை முஸ்லிம்களுடன் இணைந்து பணியாற்றுவதில் சுமந்திரன் அதீத நம்பிக்கை கொண்டிருந்ததாலா?

முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றியமையை இனச்சுத்திகரிப்பு என சுமந்திரன் பகிரங்கமாக கூறியவர். இதனால் தமிழ்த் தேசியவாத அபிமானிகள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால் சுமந்திரன் சோர்வடைந்துவிடவில்லை. தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று தொடர்ந்தும் கூறிவந்தார். வடக்கு மாகாண சபையில் ஒரு முஸ்லிம் நபரை உறுப்பினராக்க வேண்டுமென்பதில் சுமந்திரன் உறுதியாக இருந்தார். அந்த அடிப்படையில்தான் அஸ்மின் என்பவர் உறுப்பினரானார். இவற்றின் காரணமாக, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் சுமந்திரனுக்கு ரசிகர்கள் ஏராளமாகினர். முஸ்லிம் புத்திஜீவிகள் சுமந்திரனின் துனிவை போற்றினர். முஸ்லிம்களின் ஆதரவை பெறவேண்டுமென்பதற்காகவே சுமந்திரன் இவற்றையெல்லாம் செய்தார்? ஆனால் முடிந்ததா? இறுதியில் சுமந்திரனை முஸ்லிம்கள் தங்களின் நிகழ்ச்சிநிரலுக்கு பயன்படுத்திக்கொண்டனர்.

2015இல் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு ஆட்சியமைத்தது. இதற்கு பின்னாலும் சுமந்திரன் இருந்தார். அப்போது கிழக்கின் சிவில் சமூக தரப்பினர் முதலமைச்சர் இடத்தை முஸ்லிம்களுக்கு விட்டுக் கொடுப்பதை கடுமையாக ஆட்சேபித்தனர். ஆனால் 11 உறுப்பினர்களை வைத்திருந்த கூட்டமைப்பு, 7 உறுப்பினர்களை வைத்திருந்த முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சரை விட்டுக்கொடுத்து, ஆட்சியமைக்க இணங்கியது. இதனை விமர்சித்தவர்களின் வாயை அடைக்க வடக்கு – கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம்கள் தேவையென்னும் கதையை கூறி, எதிர்த்தவர்களின் வாயை அடைக்க இரா.சம்பந்தன் முற்பட்டார்.
முஸ்லிம்கள் எந்தக் காலத்திலும் தமிழ்களின் நியாயங்களுக்கு ஆதரவாக செயற்படப் போவதில்லை. இதனை இப்போதாவது சுமந்திரன் விளங்கிக்கொள்ள முயற்சிப்பாரா? வரலாற்றின் ஒரு முக்கிய தருணத்தில் கூட, கூட்டமைப்பின் முடிவுடன் முஸ்லிம் காங்கிரஸ் நிற்கவில்லை. அவ்வாறானவர்கள் பின்னர் எவ்வாறு தமிழ் மக்களுக்கு ஆதரவாக நிற்பார்கள்? அரசாங்கத்தை எதிர்த்து முஸ்லிம்களால் அதிக காலத்திற்கு மூச்சுவிட முடியாது. இப்படிப்பட்டவர்கள் வடக்கு – கிழக்கு இணைப்பை ஆதரிப்பார்களா?

  • ஆசிரியர்