இரண்டு தேர்தல்களையும் காலம் தாழ்த்த, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கேபண்டார வேண்டுகோள் விடுத்துள்ளார்.அதனையடுத்து, அரசியல்வாதிகள் பலரும், தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை இரண்டு வருடங்களுக்கு காலம்ததாழ்த்த ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து கட்சியினரிடமும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கேபண்டார வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையனமான சிறி கோத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்
நாடு தற்போது முன்னோக்கி பயணித்துக்கொண்டுள்ளது. இருந்தாலும் கூட எம்மால் இன்னமும் வங்குரோத்து நிலையிலிருந்து மீள முடியவில்லை. ஜீலை மாத்திற்குள் வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதே ஜனாதிபதியின் நோக்காக உள்ளது.
இத்தகைய பின்னணியில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றை நடத்துவது அல்ல முக்கியமான விடயம். எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான அணியினர் மற்றும் தேசிய மக்கள் சக்தியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலத்தை நீடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
அந்த வகையில் நோக்கும் போது இன்னும் இரண்டு வருடங்களுக்கு வீழ்ச்சியடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்குவதே சிறந்த விடயமாக அமையும்.