ஆர்மேனியா பிரதமரின் மனைவி ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நாகோர்னா-காராபாக் மலைப்பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பதில் அசர்பைஜான், ஆர்மேனியா ஆகிய நாடுகள் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கடுமையான மோதல் நீடித்து வருகிறது.
இருதரப்பு ராணுவ மோதலில் நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதில் அப்பாவி பொதுமக்களும் அடங்குவர். இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர ரஷியா தலையீட்டில் வந்த 2 சண்டை நிறுத்தங்களும் தோல்வியில் முடிந்த நிலையில் அமெரிக்கா தலையீட்டில் உருவான 3-வது சண்டை நிறுத்தமும் பலனளிக்கவில்லை.
சண்டை நிறுத்தத்தை மீறி அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக இருநாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. இதனால் இரு நாடுகளின் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடிக்கிறது.
இந்தநிலையில் இந்த போர் பதற்றத்துக்கு மத்தியில் ஆர்மேனியா நாட்டின் பிரதமர் நிகோல் பாஷின்யானின் மனைவி அன்னா ஹகோபியான் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். 12 பெண்களுடன் சேர்ந்து அவர் தீவிர ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பயிற்சி நிறைவு பெற்றதும் ராணுவத்துக்கு உதவும் வகையில் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அன்னா ஹகோபியான் தெரிவித்துள்ளார்