ஒருவரது இருமல் சத்தத்தை மட்டுமே கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை கண்டறியும் மென்பொருளை அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய இந்த மென்பொருளை அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு தொடர்பான ஆய்வுக்கட்டுரை, ‘ஐஇஇஇ ஜர்னல் ஆஃப் இன்ஜினியரிங் இன் மெடிசின் அண்ட் பயாலஜி’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
பரிசோதனையின் மூலம் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டவர்களிடத்தில் இந்த மென்பொருளை இயக்கி பார்த்தபோது, அது 98.5 சதவீதம் சரியான முடிவுகளையும், கொரோனா நோய்த்தொற்றுக்கான இருமல் தவிர்த்த வேறெந்த அறிகுறியும் இல்லாதவர்களை 100 சதவீதமும் சரியாக கண்டறிந்துள்ளது.
இந்த அலாக்ரிதம் எனப்படும் கணிப்பொறி நிரலாக்கத்தை அனைவரும் பயன்படுத்தத்தக்க வகையிலான திறன்பேசி செயலியாக வெளியிட கட்டுப்பாட்டு அமைப்புகளின் ஒப்புதலை ஆராய்ச்சியாளர்கள் பெற வேண்டியுள்ளது.
அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளின் இருமலின் ஒலியின் முக்கியமான வேறுபாட்டை மனித காதுகளால் கேட்க முடியாது என்றும் அதை தங்களது தொழில்நுட்ப கண்டுபிடிப்பு சாத்தியமாக்கி உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சிக்குழுவை சேர்ந்த விஞ்ஞானிகளில் ஒருவரான பிரையன் சுபிரானா கூறியதாவது:-
உலகமெங்கும் பள்ளிகள்-கல்லூரிகள், பணியிடங்கள், போக்குவரத்து சேவைகள் உள்ளிட்டவை செயல்பாட்டுக்கு வருவதால், மாணவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரை தினமும் பரிசோதனை செய்வதற்கு எங்களது கண்டுப்பிடிப்பு பயன்படும்.
மேலும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் கொரோனா வைரஸ் பரவலின் நிலையை கண்டறியவும் இது உதவக்கூடும் என கூறினார்.