தொழில் முயற்சியாளர்களை மீண்டும் மேம்படுத்தி, தனியார் அபிவிருத்தித் திட்டங்களை அமுலாக்குவதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இத்தகைய முயற்சிகள் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த ஆறரை சதவீத பொருளாதார வளர்ச்சி நோக்கி நாட்டை இட்டுச் செல்ல வழிவகுக்கும்.
இந்த வருடத்தின் முதல் பாதியில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டிருந்தது. ஆனால், அது வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது.
தெளிவான தொலைநோக்குடன் கூடிய புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை கட்டமைப்பு பொருளாதாரத்தின் செயற்றிறனை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு அப்பால் விவசாய கைத்தொழில் பெற்றோலிய துறைகள் சார்ந்த ஏற்றுமதி வாய்ப்புக்களை மேம்படுத்தவும் அதன் மூலம் துறைமுக நகர், ஹம்பாந்தோட்டை துறைமுக தொழில் வலயம் முதலான திட்டங்கள் ஊடாக போதிய வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்கான இறக்குமதி செலவினத்தில் 300 கோடி டொலரை சேமிக்க முடிந்துள்ளது.
இதன் மூலம் ஏற்றுமதிக்கும், தொழில் படைக்கும் அனுகூலங்கள் கிடைத்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ரூபாவின் பெறுமதி ஸ்திரமான மட்டத்திற்குள் வந்துள்ளது. அந்நிய செலாவணி சந்தையில் 300 மில்லியன் டொலரைக் கொள்வனவு செய்ய மத்திய வங்கிக்கு முடிந்துள்ளது.
இதன் காரணமாக ஒக்டோபர் மாதத்தில் சர்வதேச பிணை முறிகளுக்காக 100 பில்லியன் டொலரை திருப்பிச் செலுத்துதல் அடங்கலாக 400 பில்லியன் கடனைத் திரும்பிச் செலுத்த முடிந்துள்ளது. சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 700 மில்லியன் டொலரைப் பெறுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.