உடற்கல்வித் துறையில் பட்டப்படிப்பை ஆரம்பிப்பதற்கு
விளையாட்டுத்துறை அமைச்சரின் தலையீடு அவசியம்!
பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்களில் முன்னேற்றத்தைக் காண்பதற்கு துறைசார் வல்லுநர்களை உருவாக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித் துறையில் பட்டப்படிப்பை தொடங்குவதற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் தலையிட வேண்டும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுடனான கிராமியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தில் சமூக உட்கட்டமைப்புக் குழுவின் கூட்டம் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் இளைஞர்களின் எதிர்காலம் குறித்தும், போதைப் பாவனையிலிருந்து இளையோரை மீட்கும் நடவடிக்கைகள் பற்றியும் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் கூட்டத்திலிருந்தவர்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்ட சமயத்திலே துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், இளைஞர்களின் எதிர்காலம் குறித்து அமைச்சர் கொண்டிருக்கும் கரிசனை வரவேற்கத்தக்கதாகும், திறன் விருத்திக்கு ஏற்றவகையில் பலநோக்குச் செயலணிகளை உருவாக்குவதற்கும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கும் அமைச்சின் முயற்சிகள் வெற்றியளிக்க வேண்டுமாயின், அதற்கான தகுதிவாய்ந்த ஆசிரியர்களை – பயிற்றுநர்களை உருவாக்க வேண்டும். அதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தயாராகவே இருக்கிறது. அதற்குத் தேவையான சகல வளங்களும் எமது பல்கலைக்கழகத்திடம் உண்டு. எதிர்வரும் 19 ஆம் திகதி நவீன வசதிகளுடன் கூடிய உள்ளக விளையாட்டரங்கு ஒன்றும் திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் மானுடவியல், பௌதிக விஞ்ஞானம் ஆகிய துறைகளோடு உடற்கல்வித்துறையையும் ஆரம்பிப்பதற்கு முன்மொழியப்பட்டிருந்தது. எனினும் கால ஓட்டத்தில் உடற்கல்விப் பட்டப்படிப்பை நடத்துவதற்கு முடியாமல் போய் விட்டது. அதன் பின் உடற்கல்விப் பட்டப் படிப்பைஆரம்பிப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் மூன்று முறை வேண்டுதல்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைமை அடிக்கடி மாறிக் கொண்டிருந்ததனால் அது தாமதமாகிறது. தற்போதைய தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்கவின் காலத்தினுள் அது சாத்தியமாகும் என நம்புகிறோம். எனினும் விளையாட்டுத் துறை சார்ந்த அமைச்சர் என்ற வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியில் பட்டப்படிப்புக் கற்கை நெறியை ஆரம்பிப்பதற்கு, இந்த விடயத்தில் தலையிட்டு உதவி செய்ய வேண்டும் என்று துணைவேந்தர் கேட்டுக் கொண்டார்.