26.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஐபிஎல் போட்டியில் குஜராத்தை வீழ்த்தியது டெல்ஹி

இரண்டாவது தொடர்ச்சியான நாளாக குறைந்த மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 130 ஓட்டங்களைத் தக்கவைத்து நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸை 5 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.

அஹமதாபாத் நரேந்த்ர மோடி வினையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் துடுப்பெடுத்தாடுவது மிகவும் சிரமமாக இருந்ததுடன் இரண்டு அணிகளிலும் தலா ஒருவர் மாத்திரமே அரைச் சதங்களைப் பெற்றனர்.

மொஹமத் ஷமி மிகத் திறமையாகப் பந்துவீசி டெல்ஹி கெப்பிட்டல்ஸின் முதல் 5 விக்கெட்களில் நான்கை கைப்பற்றி குஜராத் டைட்டன்ஸை பலமான நிலையில் இட்ட போதிலும் அமான் ஹக்கீம் கானின் பொறுமையான அரைச் சதம் டெல்ஹி கெப்பிட்டல்ஸுக்கு உற்சாகத்தைக் கொடுப்பதாக அமைந்தது.

அத்துடன் கலீல் அஹ்மத், இஷாந்த் ஷர்மா ஆகிய இருவரும் கடைசிக் கட்டத்தில் சரியான இலக்குகளில் பந்துவீசி குஜராத் டைட்டன்ஸின் வெற்றியை உறுதிசெய்தனர்.

முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது.

மொஹமத் ஷமியின் துல்லியமான பந்துவீச்சில் நிலைகுலைந்துபோன டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 23 ஓட்டங்களை மாத்திரம் பெற்று பெரும் இக்கட்டான நிலையில் இருந்தது. வீழந்த முதல் 5 விக்கெட்களில் ஒரு ரன்அவுட் அடங்கியிருந்தது.

இந் நிலையில் மிகவும் அவசியமான 2 இணைப்பாட்டங்களில் பங்காற்றிய அமான் ஹக்கீம் கான் தனது அணி கௌரவமான நிலையை அடைய உதவினார்.

6ஆவது விக்கெட்டில் அக்சார் பட்டேலுடன் சரியாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்த அமான் ஹக்கீம் கான், 7ஆவது விக்கெட்டில் ரிப்பல் பட்டேலுடன் மேலும் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தார். இந்த மூவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

இப் போட்டியில் 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றியதன் மூலம் ஐபிஎல்லில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியை ஷமி பதிவுசெய்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

டெல்ஹியைப் போன்றே குஜராத் டைட்டன்ஸும் துடுப்பெடுத்தாடுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதுடன் 7ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 32 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

அதிரடிக்கு பெயர்பெற்ற ரிதிமான் சஹா (0), ஷுப்மான் கில் (6), விஜய் ஷன்கர் (6), டேவிட் மில்லர் (0) ஆகிய நால்வருமே ஒற்றை இலக்கங்களுடன் வெளியேறினர்.

அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் குவித்து அணியின் வெற்றிக்காக கடுமையாக முயற்சித்தார். ஆனால் ஈற்றில் அது பலனற்றுப் போனது.

5ஆவது விக்கெட்டில் அபினவ் மனோஹருடன் 62 ஓட்டங்களையும் 6ஆவது விக்கெட்டில் ராகுல் தெவாட்டியாவுடன் 22 ஓட்டங்களையும் ஹார்திக் பாண்டியா பகிர்ந்த போதிலும் வெற்றி இலக்கை அடைய அவை போதுமானதாக இருக்கவில்லை.

17ஆவது ஓவரை துல்லியமாக வீசிய குல்தீப் யாதவ் 5 ஓட்டங்களைக் கொடுத்ததுடன் கலீல் அஹ்மத் 18ஆவது ஓவரில் 4 ஓட்டங்களை மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி குஜராத்தின் வெற்றி முயற்சியைக் கட்டுப்படுத்தினர்.

12 பந்துகளில் 33 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் அண்ட்றே நோக்கியா வீசிய 19ஆவது ஓவரின் கடைசி 3 பந்துகளில் தெவாட்டியா குவித்த 3 சிக்ஸ்களுடன் அந்த ஓவரில் மொத்தமாக 21 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன.

ஆனால், கடைசி ஓவரை வீசிய அனுபவசாலியான இஷாந்த் ஷர்மா 4ஆவது பந்தில் தெவாட்டியாவின் விக்கெட்டைக் கைப்பற்றியதுடன் அந்த ஓவரில் 6 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து டெல்ஹி கெப்பிட்டல்ஸுக்கு அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

இதனிடையே இந்தப் போட்டியில் 2 விக்கெட்களைக் கைப்பற்றிய குஜராத் டைட்டன்ஸ் வீரர் மோஹித் ஷர்மா, ஐபிஎல் போட்டிகளில் 23ஆவது வீரராக 100 விக்கெட்களைப் பூர்த்திசெய்தார்.

எண்ணிக்கை சுருக்கம்

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 130 – 8 விக். (அமான் ஹக்கீம் கான் 51, அக்சார் பட்டேல் 27, ரிப்பல் பட்டேல் 23, மொஹமத் ஷமி 4 – 0 – 11 – 4 விக்., மோஹித் ஷர்மா 33 – 2 விக்.)குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 125 – 6 விக். (ஹார்திக் பாண்டியா 59 ஆ.இ., அபினவ் மனோஹர் 26, ராகுல் தெவாட்டியா 20, இஷாந்த் ஷர்மா 23 – 2 விக்., கலீல் அஹ்மத் 24 – 2 விக்.)

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles