25 C
Colombo
Sunday, October 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஒற்றுமை யாருக்காக?

தமிழ் தேசிய அரசியலை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை அவசியம்.
யுத்தம் முடிவுற்ற காலத்திலிருந்து இவ்வாறான அபிப்பிராயங்கள் பலராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்த விடயத்தில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.
2009இல் யுத்தம் முடிவுற்றபோது, தமிழ் மக்களின் முன்னால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே இருந்தது.
ஆனால் இன்றோ எண்ணுமளவிற்கு கட்சிகள் அதிகரித்துவிட்டன.
இந்த நிலையில் முன்னரைவிடவும் இப்போது ஒற்றுமைப்பட வேண்டியதன் தேவை அதிகரித்திருக்கின்றது.
தமிழ் கட்சிகள் ஒற்றுமைப்படவேண்டுமென்று கூறுகின்ற போது – முதலில் எழும் கேள்விகள் – ஏன் ஒற்றுமைப்பட வேண்டும்? யாருக்காக ஒற்றுமைப்பட வேண்டும்? 2009இற்கு பின்னர் – ஒரு விடயத்தை முன்னெடுக்கும்போது மேல்வரும் பிரதான சவாலோ வித்தியாசமானது.
அதாவது, விடயத்தின் முக்கியத்துவத்தை – அதன் தேவையை புரிந்து கொள்வதற்குப் பதிலாக – யாரோ இதற்கு பின்னால் இருக்கின்றார்கள் என்றவாறு புரிந்துகொள்வதும், தாங்கள் புரிந்து கொண்டதே சரியென்று மல்லுக்கட்டுக்கின்ற போக்கொன்று அதிகரித்திருக்கின்றது.
அனைத்தையும் சதிக் கோட்பாடுகளின் வழியாக விளங்கிக்கொள்ள முற்படும் போக்கொன்று, பலரை ஆட்கொண்டிருக்கின்றது.
இந்தப் பின்புலத்தில்தான், தமிழ் கட்சிகள் மத்தியில் ஒற்றுமையின் தேவை தொடர்பில் பேசுகின்ற போது, இந்த ஒற்றுமைக் கோரிக்கை யாருக்கானது – என்னும் கேள்வி எழலாம்.
தமிழ் கட்சிகள் சில விடயங்களில் தேர்தல் அரசியலுக்கு அப்பால் – தமிழ் மக்களின் நலன்களில் ஒரணியாக நிற்கவேண்டும் – என்பதைத்தான் ஒற்றுமை என்னும் சொல்வரையறுக்கின்றது.
அடுத்த கேள்வி – இது யாருக்கான ஒற்றுமை? பதில் சுலபமானது – இது தமிழ் மக்களுக்கான ஒற்றுமை.
தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் ஓரணியாக நிற்கின்றபோது, தமிழ் மக்களின் பேரம் பேசும் அரசியல் பலம் பெறும்.
இந்த அடிப்படையில்தான், பலமான இராணுவ கட்டமைப்புடன் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தி,
அதன் தேர்தல் வெற்றிக்காக உழைத்தது.
ஏனெனில் அன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டே, விடுதலைப் புலிகளின் தலைமை சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பை தத்தெடுத்துக்கொண்டது – அத்துடன், தங்களின் நிகழ்சி நிரலுக்கு ஏற்ப அதனை வழிநடத்தியது.
ஒரு பலமான இராணுவ அமைப்பு எதற்காக தங்களால் தடை செய்யப்பட்ட இயக்கங்களையும் உள்ளடக்கியவாறு, ஒரு ஜனநாயக கட்சிகளின் கூட்டு தொடர்பில் சிந்தித்தது? ஏனென்றால், பேச்சுவார்த்தைக்கு செல்லுகின்றபோது, தமிழ் தேசிய அரசியல் பல அணிகளால் பிரதிநிதித்துவம் செய்யப்படுமனால், அதனை சிங்கள ஆட்சியாளர்கள் தங்களின் பிரித்தாளும் தந்திரத்திற்கு இலகுவாக பயன்படுத்திவிடுவார்கள்.
இந்த அடிப்படையில்தான், தமிழ் தேசியக் கூட்டiமைப்பை விடுதலைப் புலிகள் வழிநடத்தினர்.
இன்றும் அவ்வாறானதொரு நிலைமைதான் நமக்கு முன்னால் இருக்கின்றது.
தமிழ் தேசிய அரசியல் தொடர்ந்தும் பலவீனமடைந்து செல்கின்றது.
தமிழ் தேசிய அரசியல் பல அணிகளால் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதுதான் இதற்கான பிரதான காரணமாகும்.
இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கான ஒரு சொல்லாகவே ஒற்றுமை என்னும் சொல் பயன்படுத்தப்படுகின்றது.
மற்றும்படி, ஒற்றுமையென்பது, கட்சிகளை விட்டுவிட்டு ஒன்றில் அனைவரும் கலப்பதை பற்றி பேசவில்லை.
மாறாக, அனைத்து கட்சிகளும், தமிழ் மக்களின் பேரம் பேசும் பலமாக மாறும் வகையில் ஒரு பொதுப் புள்ளியில் சந்திக்க வேண்டும்.
மக்களின் நலனுக்காக இதனை அனைத்து கட்சிகளும் கட்டாயம் செய்தாக வேண்டியிருக்கின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles