கமல்ஹாசனின் சத்யா திரைப்பட ரீமேக்கில் அசோக் செல்வன்!

0
102

தமிழ் சினிமாவில் பல்லாண்டு காலமாக உலக நாயகனாக திகழ்ந்து கொண்டிருக்கும் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட சத்யா திரைப்படம் மீண்டும் ரீமேக்காக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தை போர் தொழில் பட புகழ் விக்னேஷ் ராஜா இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் 1988ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் சத்யா. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக அமலா நடித்திருந்தார். இவருடன் நாசர், ராஜேஷ் கிட்டி, ஜனகராஜ், வடிவுக்கரசி, நடராஜன், ஆர் எஸ் சிவாஜி, கவிஞர் வாலி, ஆர் கணேஷ் என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

இப்படத்தை ரஜினிகாந்த் நடித்த பாட்சா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார்.

கமல்ஹாசனின் சத்யா: சத்யா திரைப்படம் இந்தியில் 1985ம் ஆண்டு வெளியான அர்ஜுன் படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் சன்னி தியோல், டிம்பிள் கபாடியா நடித்திருந்தார்.

இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தைத்தான் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தமிழில் கமலை வைத்து இயக்கினார்.

இந்த படம் இந்தியில் வெற்றி பெற்றதை விட தமிழில் பெரும் வசூலை அள்ளி, கமலின் திரைப்பயணத்தில் மறக்கமுடியாத படமாக மாறியது.

இந்த படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்திருந்தது.

சத்தியமூர்த்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த கமல், அநீதியைப் பொறுத்துக் கொள்ளாத வேலையற்ற இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும், முகத்தில் லேசான தாடி, முறுக்கிவிட்ட மீசை,ஒட்ட வெட்டிய தலை முடி, கழுத்தில் கயிறு, கையில் காப்பு என்று அந்த படத்தில் ஒருவிதமான லுக்கை அறிமுகப்படுத்தி இருப்பார் கமல், இந்த படத்தில் வரும் வளையோசை கலகல என்ற பாடல் ரசிகர்களுக்கு இன்று வரை பிடிக்கும் எவர் க்ரீன் பாடலாக உள்ளது.

சத்யா ரீ மேக்:இப்படி வசூலை அள்ளிக்குவித்த சத்யா திரைப்படம் தற்போது ரீ மேக்காக உள்ளது.

இந்த படத்தை போர் தொழில் பட புகழ் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்க இருப்பதாகவும், கமல் கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சூது கவ்வும் படத்தின் மூலம்தமிழ் சினிமாவில் நடிகராக தனது பயணத்தை துவங்கிய அசோக் செல்வன், தெகிடி, சவாலே சமாளி, ஓ மை கடவுளே, ஹாஸ்டல், சில நேரங்களில் சில மனிதர்கள், போர் தொழில்,ப்ளு ஸ்டார் என நல்ல கதை அம்சம் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.