அம்பாறை மாவட்ட கல்முனை ஸ்ரீ தரவைப்பிள்ளையார் ஆலயத்தில் தொற்றிலிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி விசேட பிரார்த்தனை வழிபாடு நடைபெற்றுள்ளது.
பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
விசேடமாக ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் விசேட பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஸ்ரீ தரவைப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ விஜயகுமார் தலைமையில் நடைபெற்றன.
இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் கல்முனைப் பிரதேச செயலாளர் ஏ.ஜே.அதிசயராஜ் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகஸ்தர் ஜெயராஜீ கலாசார உத்தியோகஸ்தர் விக்கினேஸ்வரன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.