31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

காலம் எவ்வாறு மாறியிருக்கின்றது?

இலங்கையின் ஓய்வு பெற்ற இராணுவத்தினர் சிலரை, ரஷ்யாவுக்கு கடத்தியிருப்பதாக ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
இவ்வாறு ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட இராணு வத்தினர், உக்ரைனுக்கு எதிரான போரில், கூலிப்படையினராக பயன் படுத்தப்பட்டிருக்கின்றனர் – அதேவேளை, முன்னரங்கில் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்படுவதற்கு பயன்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. விடுதலைப் புலிகள் இயக்கத்தை யுத்தத்தில் அழித்த தேசிய வீரர் களாக போற்றப்படும் இராணுவத்தினர், பிறிதொரு நாட்டின் யுத்தத்தில் கூலிப்படையினராக அதுவும் முன்னரங்கில் பலியாடுகளாக பயன்படுத்தப்படும் நிலைமையானது அவர்களின் தேசிய வீரர்கள் என்னும் தகுதி நிலைக்கு முற்றிலும் மாறானதாகும்.
இலங்கையின் தேசிய வீரர்கள் எவ்வாறு பிறிதொரு நாட்டின் யுத்தத்தில் கூலிப்படையினராக இணை கின்றனர்? இந்த நிலைமையை எவ்வாறு புரிந்து கொள்வது? விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் வீரர்களாக – கதாநாயகர்களாக போற்றப் பட்டவர்கள் ஒரே நாளில் தங்கிவாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அனைத்துக்கும் அஞ்சி வாழும் நிலையை எதிர்கொண்டனர்.
சொந்த சமூகத்திலேயே அந்நியர்கள் போன்ற நிலையை அடைந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொள்ள விரும்பிய போது, நீங்கள் எல்லோரும் இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு பணியாற்றுபவர்கள் என்றவாறு கூறி, அவமா னப்படுத்தப்பட்டனர். அப்போதெல்லாம் சிங்கள மக்கள் மத்தியில் இராணுவத்தினர் தேசிய வீரர்களாக போற்றப்பட்டுக் கொண்டிருந்தனர்.
ஆனால், இன்று அவ்வாறானவர்களே நாட்டில் வாழ முடியாதென்னும் நிலையால், பிறிதொரு நாட்டுக்கு கூலிப்படையினராக கடத்தப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
அந்தளவிற்கு நாடு பொருளாதார ரீதியில் அதல பாதாளத்தை எட்டியிருக்கின்றது. இதிலிருந்து மீண்டெழும் நிலையை காணாவிட்டால் இது போன்று இன்னும் பலவாறான அவலங்களை நாடு காண நேரிடலாம். ஆனால் இவ்வாறானதொரு நிலையில் கூட, நாட்டின் அடிப்படை யான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஆட்சியாளர்கள் சிந்திக்கவில்லை. தேசிய இனப்பிரச்னைக்கு தீர்வு காணும் வழிமுறைகளை வெளிப்படையாக முன்வைக்கும் நிலையில் இல்லை.
தேசிய இனப்பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் போலி யான கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் விதைத்ததன் காரண மாகவே நாடு இவ்வாறானதொரு நிலைக்குள் சிக்கியிருக்கின்றது. இலங்கைத் தீவை மாறி, மாறி ஆட்சி செய்த அனைத்து சிங்கள ஆட்சி யாளர்களும் இதற்கான பொறுப்பாளிகளாவர். யுத்தமும் அழிவுகளும் இந்த நிலைமையின் விளைவுகள்தான்.
யுத்த வெற்றியின் பின்னரான அரசியல் சூழலில் முதலில் செய்யப் பட்டிருக்க வேண்டியது – யுத்தத்திற்கான காரணங்களை இல்லா தொழிக்கும் நோக்கில், அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும் ஆனால், யுத்த வெற்றியை தங்களது சாதனையாக காண்பித்து, சிங்கள தேசியவாதத்தின் புதிய காவலர்களாக காட்சிப்படுத்தினர்.
இதன் விளைவாக நாடு மேலும் புதிய நெருக்கடிக்குள் சிக்கியது. இவை அனைத்தினதும் ஒட்டுமொத்த விளைவுகளையே நாட்டின் அனைத்து மக்களும் எதிர்கொண்டிருக்கின்றனர். இந்த யதார்த்தத்தை சிங்கள ஆளும் வர்க்கம் புரிந்து கொண்டால் மட்டுமே, செழிப்பான எதிர் காலத்தை மக்கள் காண முடியும்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles