மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
அதன்படி செங்கலடி பிரதேசத்தில் ஒருவருக்கும், ஏறாவூர் பிரதேசத்தில் ஒருவருக்கும், கோறளைப்பற்று மத்தியை சேர்ந்த ஒருவருக்குமாக மொத்தம் மூன்று பேர் இன்று கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை இறக்காமம் பகுதியில் கொழும்பின் புத்தக கடை ஒன்றில் பணிபுரிந்து தமது இல்லங்களுக்கு திரும்பியிருந்த இறுதியாக அடையாளப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உள்ளவரின் தந்தையருக்கும் அவரின் சகோதரருக்கும் கடந்த 4ஆம் திகதி பெறப்பட்ட PCR மாதிரிகளின் முடிவுகள் நேற்று இரவு கிடைக்கப் பெற்றதை அடுத்து இறக்காமம் பகுதியில் மேலும் இரு நோயாளிகள் அடையாளப்படுத்தப்பட்டு இன்று காலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மட்டக்களப்பில் 47 பேரும், திருகோணமலை 13 பேரும் , கல்முனை 20 பேரும் ,அம்பாறை 7 பேரும் கொரோனா தொற்றில் இனம் கணப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மக்கள் அவதானமாக செயற்படுமாறும், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை மக்கள் அடையாளம் கண்டு தெரிவிக்குமாறும், சன நடமாட்டத்தை குறைக்குமாறும் இயலுமானவரை வீட்டில் இருக்குமாறும் கிழக்கு மாகாண மக்களுக்கு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் உரிய பிரதேசங்களின் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.