யாரோ ஒரு தரப்பினரின் கைப்பாவையாக செயற்படும் காவல்துறையினர் சட்டத்தை கையிலெடுத்துள்ளனர். அவர்களை உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கு தயாராக இருக்குமாறு எச்சரிப்பதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தவிசாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு, டாலி வீதியில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்துக்கு சென்ற போது ஏற்பட்ட பதற்ற நிலைமையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.அவர் மேலும் குறிப்பிடுகையில், “பதில் தவிசாளராக நியமனம் வழங்கப்பட்டதையடுத்து, எமது பணிகளை ஆரம்பிப்பதற்காகவே கட்சி தலைமையகத்துக்கு வருகை தந்தோம்.
எனினும் கட்சி தலைமையகத்தின் பிரதான நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. இங்கு விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் உட்செல்ல அனுமதிக்க முடியாது என்று காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
கடந்த 5ஆம் திகதி கோப்புக்கள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரையிலும் காவல்துறையினர் எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை. ஆனால் மேலும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக தற்போது காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
தலைமையகத்தின் முதலாவது மாடியிலேயே கோப்புக்கள் காணாமல் போயுள்ளதாக, பதில் செயலாளர் முறைப்பாடளித்துள்ளார்.எனவே முதலாம் மாடிக்கு செல்ல மாட்டோம் என்றும், ஐந்தாம் மாடியிலுள்ள கேட்போர் கூடத்திலேயே கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் நாம் காவல்துறையினருக்கு தெளிவுபடுத்தினோம்.
இருந்தும் சட்ட விரோதமாக, சட்டத்தைக் கையிலெடுத்துள்ள காவல்துறையினர் எமக்கு அனுமதி வழங்கப்படவில்லை. காவல்துறை உத்தியோகத்தர்களின் இந்த செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது.
இவர்கள் அனைவரையும் உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கின்றேன். காவல்துறையினர் பக்கசார்பாகவே செயற்படுகின்றனர். நாம் எமது முறைப்பாட்டினை மீளப் பெறப் போவதில்லை. காவல்துறையினர் சட்டத்துக்கு முரணாக செயற்படுகின்றனர்“ என தெரிவித்தார்.