இலங்கையில், கொரோனா வைரஸ் இன்னும் சமூகத் தொற்றாக மாறவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவின் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த நேரத்தில் கண்டறியப்பட்ட அனைத்து நோயாளிகளும் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பத்தில், மினுவாங்கொடை கொத்தணியிலிருந்து ஏராளமான நோயாளிகள் கண்டறியப்பட்டனர். ஆனால், இப்போது எண்ணிக்கையில் குறைவு காணப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊரடங்கு முடக்கக் கட்டுப்பாடுகள் இல்லாதபோது பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய பெரும்பாலானோர் கண்டறியப்பட்டதால், அது ஏற்கனவே ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவியிருப்பது கண்டறியப்பட்டது என்றும் இதன் விளைவாக நாடு முழுவதும் ஏராளமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில், கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் 500 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு புதிய நோயாளர்களாக இனங்காணப்பட்டு வருகின்றனர். அதேவேளை, கொரோனாவால் இதுவரை 35 பேர் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.