26 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனாவுக்கு மத்தியில் பெரும் சமர் ! வெல்லப் போவது யார் ?

கொரோனாவுக்கு மத்தியில் 13 ஆவது ஐ.பி.எல். தொடருக்கான இறுதிப்போட்டி இன்று டுபாயில் இடம்பெறவுள்ளது.

இன்றைய இறுதிப் போட்டியில் சமபலம் பொருந்திய அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கெபிட்டல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

8 அணிகளுக்கிடையிலான 13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாகியது.

அபுதாபி, டுபாய், சார்ஜா ஆகிய நகரங்களில் அரங்கேறிய லீக் ஆட்டங்களின் நிறைவில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், டில்லி கெபிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே – ஓப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் முறையே 5 முதல் 8 ஆவது இடங்களை பிடித்து வெளியேறின.

டுபாயில் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது தகுதி சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டில்லி கெபிட்டல்சை வீழ்த்தி 6 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

அபுதாபியில் 6 ஆம் திகதி இடம்பெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ரோயல் சலஞ்சர்சை வீழ்த்தி வெளியேற்றி 2 ஆவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.

அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற 2 ஆவது தகுதி சுற்று ஆட்டத்தில் டில்லி கெப்பிட்டல்ஸ் அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை அணியை வென்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

இம்முறை ஐ.பி.எல். கிண்ணத்தை வெல்லப்போவது யார் ? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி டுபாயில் இடம்பெறுகின்ற நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டில்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

4 முறை (2013, 2015, 2017, 2019) கிண்ணத்தை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 2010 ஆம் ஆண்டில் மட்டுமே இறுதிப்போட்டியில் தோல்வியை (சென்னையிடம்) சந்தித்தது. ஏனைய இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற எல்லா தடவையும் வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.

இம் முறை தொடரில் 9 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்ததுடன் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பையின் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு வலுவானதாக விளங்குகிறது.

துடுப்பாட்டத்தில் குயின்டான் டி கொக் (4 அரைசதத்துடன் 483 ஓட்டங்கள்), இஷான் கிஷன் (4 அரைசதத்துடன் 483 ஓட்டங்கள்), சூர்யகுமார் யாதவ் (4 அரைசதத்துடன் 461 ஓட்டங்கள்), பொல்லார்ட் (259 ஓட்டங்கள்), ஹர்திக் பாண்டியா (278 ஓட்டங்கள்) நல்ல ஆட்டத்திறனில் உள்ளனர்.

உபாதைக்கு மத்தியில் களம் திரும்பிய அணித் தலைவர் ரோகித் சர்மா (264 ஓட்டங்கள் ) கடைசி 3 ஆட்டங்களில் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். இதனால் அவர் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

மும்பை அணியினர் இதுவரை 130 சிக்சர்கள் விளாசி இருக்கின்றனர். இதுவே அந்த அணியின் அதிரடிக்கு சான்றாகும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (27 விக்கெட்), டிரென்ட் பவுல்ட் (22 விக்கெட்), ராகுல் சாஹர் (15 விக்கெட்) ஆகியோர் அசத்தி வருகிறார்கள்.

8 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 2 ஆவது இடத்தை பிடித்த டில்லி அணி தொடரின் தொடக்கத்தில் வீறு நடைபோட்டது. ஆனால் தற்போது சற்று தடுமாறுகிறது. முதலாவது தகுதி சுற்று உட்பட இறுதி 6 போட்டிகளில் 5 இல் தோல்வியை சந்தித்த அந்த அணி 2 ஆவது தகுதி சுற்றில் ஐதராபாத்துக்கு சவாலாக விளங்கி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

அந்த அணியின் துடுப்பாட்டத்தில் ஷிகர் தவான் முதுகெலும்பாக விளங்கி வருகிறார். அவர் இதுவரை 2 சதம், 4 அரைசதம் உட்பட 603 ஓட்டங்கள் குவித்து இருக்கிறார். டில்லியின் அணித் தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் (454 ஓட்டங்கள்), மார்கஸ் ஸ்டோனிஸ் (352 ஓட்டங்கள்) ஆகியோரும் துடுப்பாட்டத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

மோசமான ஆட்டத்திறன் காரணமாக கடந்த ஆட்டத்தில் பிரித்வி ஷா கழற்றி விடப்பட்டார். அவருக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான். ரஹானே, ரிஷாப் பண்ட் நிலைத்து நின்று ஆடினால் அந்த அணியின் துடுப்பாட்டத்தில் மேலும் வலுப்பெறும்.

பந்து வீச்சில் காஜிசோ ரபடா (29 விக்கெட்), நோர்டியா (20 விக்கெட்), சகலதுறை ஆட்டக்காரர் மார்கஸ் ஸ்டோனிஸ் (12 விக்கெட்), ஆர்.அஸ்வின் (13 விக்கெட்), அக்‌ஷர் பட்டேல் (9 விக்கெட்) ஆகியோர் வலுசேர்த்து வருகிறார்கள். ஐதராபாத் அணிக்கு எதிரான தகுதி சுற்றில் பழைய நிலைக்கு திரும்பி பெற்ற வெற்றி டில்லி அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

நடப்பு தொடரில் 2 லீக் போட்டிகளிலும் முறையே 5 விக்கெட் மற்றும் 9 விக்கெட் வித்தியாசத்தில் டல்லி அணியை பந்தாடிய மும்பை அணி முதலாவது தகுதி சுற்றிலும் 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அந்த அணிக்கு எதிராக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் மும்பை அணியே இறுதிப்போட்டியிலும் கிண்ணத்தை கைப்பற்றும் அதிக வாய்ப்பு இருக்கிறது. மும்பைக்கு எதிரான 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு இருக்கும் டில்லி அணி அதற்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

அதிக முறை கிண்ணத்தை வென்று இருக்கும் மும்பை அணி 5 ஆவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றி தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுமா? அல்லது முதல்முறையாக கிண்ணத்தை வென்று நீண்ட நாள் தாகத்தை தீர்த்து டில்லி அணி சரித்திரம் படைக் குமா ? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

மும்பை: குயின்டான் டி கொக், ரோகித் சர்மா (அணித் தலைவர் ), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொல்லார்ட், குருணல் பாண்ட்யா, ஹர்திக் பாண்டியா, நாதன் கவுல்டர் நிலே, டிரென்ட் பவுல்ட், ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.

டில்லி: மார்கஸ் ஸ்டோனிஸ், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் ( அணித் தலைவர்), ஹெட்மயர், ரிஷாப் பண்ட், ரஹானே, பிரவின் துபே, அக்‌ஷர் பட்டேல், ஆர்.அஸ்வின், காஜிசோ ரபடா, நோர்டியா.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles