கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வரும் அனைவரும் 14 நாட்களுக்கு அவர்களின் வீடுகளிலேயே சுயதனிமைக்குட்படுத்தப்படுவார்கள் என அட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜித அல்விஸ் தெரிவித்தார் தெரிவித்தார்.
அட்டனில் நேற்று மாலை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் குறிப்பிட்டவை வருமாறு;
கொரோனா தொற்று அச்சம் காரணமாக சுயதனிமை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மேல்மாகாணம் நாளை காலை 05 மணிமுதல் தளர்த்தப்படவுள்ளது. இந் நிலையில் கொழும்பிலிருந்து வேலை செய்யும் இளைஞர், யுவதிகள் அதிகளவில் மலையகப் பகுதிகளுக்கு வரும் வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு வருவோரை அவர்களது வீடுகளிலே 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்த சகல பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை முதல் கினிகத்தேனை கலுகல , தியகல, பொகவந்தலாவை, பெற்றசோ ஆகிய பொலிஸ் சோதனை சாவடிகளில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
சோதனை சாவடிக்களையும் மீறி உள்ளே நுழைந்தவர்களை தேடி அவர்களை 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்துமாறு அட்டன், நோட்டன் பிரிட்ஜ், மஸ்கெலியா, நல்லத்தண்ணி, நோர்வூட், பொகவந்தலாவை, வட்டவளை மற்றும் கினிகத்தேனை பொலிஸ் நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.