கொழும்பு, காக்கைதீவு கடற்கரை பகுதியை சுற்றுலாப் பயணிகளை கவரும் சிறந்த இடமாக மாற்றவும், இரவு வேளைகளில் இயங்கும் அங்காடி கடைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுப்பதோடு, கொழும்பில் குப்பைகளை வீசுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மேல் மாகாண ஆளுநர் ஹனீஸ் யூசுப் தெரிவித்தார்.
கொழும்பு , காக்கைதீவு கடற்கரை பகுதிக்கு மேல் மாகாண ஆளுநர் ஹனீஸ் யூசுப் வெள்ளிக்கிழமை (22) மாலை 3 மணியளவில் விஜயம் மேற்கொண்டு குறித்த பகுதியை மேற்பார்வை செய்தார்.
இந்த மேற்பார்வை விஜயத்தின் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும் போதே , மேல் மாகாண ஆளுநர் ஹனீஸ் யூசுப் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஹனீஸ் யூசுப்,
“கிளீன் ஶ்ரீ லங்கா” ( Clean Srilanka ) என்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் திட்டத்திற்கு அமைய, காக்கைதீவு கடற்கரை பகுதியை குறுகிய காலத்தில் அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.
இந்தப் பகுதியை சுற்றுலா பயணிகளை கவரும் சிறந்த இடமாக மாற்றவும், இரவு வேளைகளில் இயங்கும் அங்காடி கடைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
காக்கைத்தீவு கடற்கரைக்கு பெருமளவு மக்கள் பொழுதைக் கழிக்க வருவதை வரவேற்கின்றேன். இந்தப் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் ஆங்காங்கே குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன.
இது தொடர்பில் கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபை ஆணையாளர் பாலித்த நாணயக்கார, உப ஆணையாளர் ரோஹண, கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் லயன் சிதம்பரம் மனோகரன், காக்கைத்தீவு கரையோர பூங்கா முகாமைத்துவ சங்க அங்கத்தவர்கள், நகரசபையின் சிரேஷ்ட அதிகாரிகள் , இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபன அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், கடற்படை, பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
களனி ஆற்றின் ஊடாக காக்கைதீவு கடற்கரையில் குவியும் குப்பைகளை அகற்றுவது மற்றும் குப்பைகளை ஆற்றில் போடுவதை எவ்வாறு தடுப்பது, குறுகிய காலத்தில் அங்கு குவியும் குப்பைகளை எவ்வாறு அகற்றி அப்பகுதியை சுத்தமாக வைத்திருப்பது என்பது தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலின் போது, கடற்படை அதிகாரிகள் மற்றும் பல திணைக்கள அதிகாரிகளின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் , கொழும்பு நகர வாய்க்கால்களில் குப்பைகளை வீசுவதால், அந்த குப்பைகள் கால்வாய்களின் வழியே அடித்து செல்லப்பட்டு காக்கைதீவு கடற்கரை பகுதியில் குவிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை தடுப்பதற்கு, மக்கள் குப்பைகளை வீசுவதை தவிர்க்க வேண்டும் என கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் அறிவுறுத்தினர். அவ்வாறு குப்பைகளை வாய்க்கால்களில் வீசுவோருககு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தண்டணைகள் வழங்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினர்.