கொழும்பு முகத்துவாரத்தில் மேலும் 32 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
முகத்துவாரம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என கொழும்பு மாநகர சபை பிரதான மருத்துவ அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பில் இன்று மாத்திரம் 400 பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை கொரோனா தொற்றால் உயிரிழந்த 23 வயது இளைஞன் இப்பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் 5 ஆயிரத்து 217 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு 467 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதுடன் கொரோனா தொற்றால் இதுவரை 30 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.