எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் ஜூன் மாதம் ஆறாம் திகதி விவாதத்துக்கு வரவில்லையென்றால் அதற்குப் பின்னர் அந்த விடயத்தை முற்றாக கைவிடப்போவதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.கொழும்பில் ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் எதிர்வரும் ஜூன் ஆறாம் திகதி விவாதம் நடத்துவதற்குத் தயார் என எமது கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஏற்கனவே அறிவித்துள்ளார்.இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் நாட்டுக்கும் நாம் அறிவித்திருந்தோம். எனினும் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் எம்மோடு கலந்துரையாடப்படவில்லை.
நாட்டில் ஜனாதிபதித் தேர்தலே அடுத்து இடம்பெறப்போகிறது. ஆதலால் இரு வேட்பாளர்களுக்கிடையேயான விவாதம் தான் பொருத்தமாக இருக்கும் என்பது எமது நிலைப்பாடாகும்.விவாதம் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியினால் நிர்ணயிக்கப்பட்ட திகதியையே நாமும் தெரிவுசெய்திருந்தோம். இப்போது அவர்கள் மாற்றுக் கருத்துகளை கூறிக்கொண்டிருக்கின்றனர்.நாம் இணங்கிய திகதியில் விவாதம் நடத்தப்படாவிட்டால் அது தொடர்பில் எதிர்காலத்தில் நாம் எந்தப்பேச்சுவார்த்தையிலும் ஈடுபடமாட்டோம்.