நெடுங்கேணி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடந்த 21ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்ட சாவகச்சேரியைச் சேர்ந்த பொறியியலாளருக்கு கோரோனா தோற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சட்டத்தரணியான அவரது மனைவியிடம் பிசிஆர் பரிசோதனை நாளை முன்னெடுக்கப்படும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டத்தரணி, சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டடத் தொகுதிகளுக்கு சென்றுள்ளார் என்று அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் சட்டத்தரணி சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிசிஆர் பரிசோதனையின் பின்னரே மேலதிக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
சட்டத்தரணி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு செவ்வாய், புதன்கிழமை வருகை தந்துள்ளார்.
அத்துடன், சாவகச்சேரி நீதிமன்றுக்கும் அவர் சென்றுள்ளார்.
வவுனியா – நெடுங்கேணி வீதி சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் நிறுவனத்தில் பணியாற்றும் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இன்று செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சாவகச்சேரி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பொறியியலாளர்கள் இருவரும் அடங்குகின்றனர்.