28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சிறுபான்மையினரை அனுசரித்துப்போகும் ஒரு தலைவர் உலகில் உள்ளார் – ஜோ பைடனுக்கு இராதாகிருஷ்ணன் வாழ்த்து

மதச்சார்பற்ற, சிறுபான்மையினத்தவர்களையும் அரவணைத்து பயணிக்கக்கூடிய ஜோ பைடன், அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, எதிர்காலத்தில் ஏனைய நாடுகளிலும், மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வே.இராதாகிருஷ்ணன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நுவரெலியாவில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு மலையக மக்கள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயம். மதச் சார்பின்றி, சிறுபான்மையினம் – பெரும்பான்மையினம் என்ற பாகுபாடுகளுக்கு அப்பால் மக்களின் நன்மதிப்பை அவர் பெற்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாகயிருந்த ஒபாமா, கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்றபோதும் பெரும்பான்மையின மக்களும் அவருக்கு வாக்களித்தனர். அனைவரையும் அனுசரித்தே ஒபாமாவின் அரசியல் பயணம் அமைந்தது. அதேபோன்று ஜோ பைடனும் சிறுபான்மையின மக்களை அரவணைத்துக்கொண்டே முன்னோக்கிச்செல்வார். அனைத்து இன மக்களும் அவருக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.

அதுமட்டுமல்ல ஜோ பைடனின் வெற்றி என்பது சிறுபான்மையின மக்களை அனுசரித்துப்போகவேண்டிய ஒரு தலைவர் உலகில் இருக்கிறார் என்ற செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது. மதச்சார்பற்ற, சிறுபான்மையின மக்களைப் புறந்தள்ளாது செயல்படும் நபரே ஜோ பைடன் என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது.

எதிர்காலத்தில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் இவ்வாறான மாறுதல்கள் ஏற்படலாம். அதாவது மதச்சார்பற்ற, மொழிபேதமற்ற தலைவர்களை மக்கள் மதிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும் எனத் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles