ஐக்கிய தேசிய கட்சியின் யாப்புக்கு முரணாக செயற்பட்டு தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியை ரவி கருணாநாயக்க பெற்றுக்கொண்டுள்ளார். இதுதொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதற்கு கட்சியின் செயற்குழுவை கூட்டுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினர் கலாநிதி லசன்த குணவர்த்தன கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இடம்பெற்று முடிந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட எமது கட்சி உள்ளிட்ட கூட்டணிக்கு கிடைக்கப்பெற்ற இரண்டு தேசியப்பட்டியில் உறுப்பினர் பதவியில் ஒன்றை ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்கவினால் சரியான முறையாகவும் கட்சியின் அனுமதி இல்லாமலும் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
ரவி கருணாநாயக்கவின் இந்த நடவடிக்கை ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பை முற்றாக மீறும் செயலாகும். அதனால் இதுதொடர்பாக கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவை மிக விரைவாக கூட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.