20 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் விரிவாக்கப்படவுள்ள உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் வெற்றிடங்களுக்கு தனது துறையின் மூத்த உறுப்பினர்களை புறக்கணிப்பது குறித்து சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் குறித்த நியமனங்களை வழங்குவதற்கான முழு அதிகாரமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதற்கான பரிந்துரைகளை வழங்க அரசியலமைப்பு சபைக்கு பதிலாக புதிதாக நிறுவப்பட்ட நாடாளுமன்ற சபை ஆறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது.
இவர்களே 11 முதல் 17 வரை விரிவாக்கப்பட வேண்டிய உயர் நீதிமன்றத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு பெயர்களை பரிந்துரைப்பர்.
அந்தவகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ஏ.எம்.டி. நவாஸ் மற்றும் நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க, ஷிரான் குணரத்ன, அச்சலா வெங்கப்புலி, மஹிந்த சமயவர்தன மற்றும் ஜனக டி சில்வா ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற சபையில் அரசாங்கத்தின் சார்பாக மிக உயர்ந்த பிரதிநிதியாக உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சட்டமா அதிபர் தனது ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி உயர் நீதிமன்றத்தில் காணப்படும் வெற்றிடங்களை கணிசமான ஆண்டு சேவையுடன் கூடிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூத்த உறுப்பினர்கள் எவரும் பரிசீலிக்கப்படவில்லை என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு குறித்த வெற்றிடங்கள் தொடர்பாக பரிசீலிக்க 04 பேர் கொண்ட மேலதிக தலைமை வழக்குரைஞர்களையும் சட்டமா அதிபர் பரிந்துரைத்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் தனது மூத்த ஆலோசகர்களில் ஒருவரான லலித் வீரதுங்கவிடமிருந்து குறித்த விடயங்களை தெளிவுபடுத்தியதோடு, நிலைமை குறித்து ஆராய்வதாகவும் சட்டமா அதிபரிடம் கூறியுள்ளார்.
இதற்கிடையில், மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு 12 முதல் 20 வரை விரிவாக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, பதவிகளுக்கு பரிசீலிக்கப்பட வேண்டிய 15 உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தொடர்பான விவரங்களுக்கு ஜனாதிபதி அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.