31 C
Colombo
Tuesday, November 12, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜனாதிபதி மீது இருக்கும் நம்பிக்கை: அமைச்சர் டக்ளஸ் தெரிப்பு

தமிழ் மக்களின் அபிலாசைகளை பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் அமையும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையிலும் சகோதர முஸ்லீம்களின் காய்கறி நறுக்கும் கத்திகள்கூட பயங்கரவாத ஆயுதங்களாக சித்தரிக்கும் சூழலை எற்படுத்திய 19 ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற அவசியத்தின் அடிப்படையிலும் 20 ஆவது திருத்தச் சட்டத்தினை ஆதரிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

அதேவேளை, நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்ததாவது;

20வது திருத்தச் சட்டமானது சிறுபான்மை மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என்ற கருத்து தெரிவிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த நாட்டில் ஜனாதிபதியின் கரங்களில் நிறைவேற்று அதிகாரம் இருந்த காலப் பகுதியை விட, நிறைவேற்று அதிகாரம் இல்லாத காலப் பகுதியிலேயே அதிகளவில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தமையை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அதிகார குழப்பங்கள் காரணமாக ஈஸ்தர் தாக்குதலுக்கான சூழல் ஏற்பட்டதையும், அதன் காரணமாக சகோதர முஸ்லீம்களின் வாழ்வியலும் பொருளாதாரமும் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியமையையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், எமது அர்ப்பணத்துடன்கூடிய நியாயமான போராட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட மாகாண சபை முறைமைக்கு வழிகோலும் 13வது திருத்தச் சட்டமானது, அன்று ஆட்சியில் இருந்த பிரதமர் உள்ளடங்கலான பிரபல தலைவர்களதும், எதிர்க்கட்சியினதும் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், அதற்கெதிரான தென்பகுதியின் ஆயுதமேந்திய வன்முறைகளுக்கு மத்தியிலும், நிறைவேற்றிக் கொள்வதற்கு ஜனாதிபியின் கரங்களில் அதிகாரங்கள் இருந்தமையினாலேயே சாத்தியமாக்கப்பட்டது.

அதேபோன்று, நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களுக்கான வெட்டுப் புள்ளியானது 12 விகிதத்திலிருந்து 5 விகிதம் வரையில் குறைக்கப்பட்டதும் சிறுபான்மை கட்சிகளினது பிரதிநிதித்துவம் அதிகரிப்பதற்குமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியின் காரணமாகவே எனவும் சுட்டிக்காட்டினார்.

தமிழர் வரலாற்றில் மாபெரும் போராட்டங்களில் ஒன்றாக சித்தரிக்கப்படுகின்ற ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்தினாலும் அகற்றப்படாது போயிருந்த வாகனங்களில் காணப்பட்ட ஸ்ரீ எழுத்து ஒரே இரவில் அகற்றப்பட்டதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் என்பதை நினைவுபடுத்தினார்.

ஆனால், நிறைவேற்று அதிகாரத்தினை வலுவிழக்கச் செய்த 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் அபிலாசைகள் எவற்றையும் நிறைவேற்ற முடியவில்லை என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 20வது திருத்தச் சட்டம் தொடர்பில் சாதகமான அல்லது பாதகமான கருத்துக்கள் இருப்பின் அவற்றை முறைப்படி முன்வைப்பது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.

அதேவேளை, ஜனாதிபதிக்கான அதிகாரங்களை வலுவடைச் செய்யும் வகையில் 20 ஆவது திருத்தச் சட்டம் அமைகின்ற போதிலும், சிறுபான்னை மக்களின் அபிலாசைகளை பாதுகாக்கும் வகையில் நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் மாத்திரமே அவற்றை தற்போதைய ஜனாதிபதி பயன்படுத்துவார் என்ற நம்பிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles