‘இந்தியா விரும்பும் ஒருவரை ஆட்சியில் அமர்த்த தமிழ்த் தலைமைகள் வேலை செய்கின்றன’, என்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (முன்னணி) பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டிருக்கின்றார். காங்கிரஸ் கட்சி இவ்வாறு பேசுவது புதிதல்ல. இது, ஒருவகையான ‘கட்சி நோயாகவே’ தொடர்கின்றது. ஆனால், இவ்வாறான கதைகள் மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியில் சொல்லப்படும்போது அது எதிர்மறையான சிந்தனையை ஏற்படுத்துவதற்கு – முற்றிலுமாக இல்லாவிட்டாலும்கூட பகுதியளவிலாவது பங்களிக்கும்.
உண்மையில், இந்தியா யாரை விரும்புகின்றது? அது யாருக்குத் தெரியும்? இந்தக் கேள்விக்குப் பதிலாக ஊகங்களை வெளியிடலாம். ஆனால், முடிந்த முடிவாக எதனையும் குறிப்பிட முடியாது. தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாடு தொடர்பில் உரையாடப்பட்ட காலத்திலிருந்து அதன்மீது சந்தேகங்களும் கேள்விகளும் முன்வைக்கப்பட்டன. இவ்வாறான கேள்விகளை முன்வைத்தவர்கள் எவருமே தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதற்குத் தெளிவான – உறுதியான பதிலை எவருமே முன்வைக்கவில்லை – இன்றுவரையில் முன்வைக்க முடியவில்லை.
தமிழ் அரசுக் கட்சியின் ஓர் அணியினர் இந்த நிலைப்பாட்டைத் தோற்கடிக்கப் போவதாக சூளுரைக்கின்றனர். ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி அதிக தமிழ் வாக்குகளை குவிப்பதால் தமிழ் மக்களுக்கு எவ்வாறான நட்டம் ஏற்பட்டுவிடப் போகின்றது? உண்மையில், தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்க மறுப்பவர்கள் – அதிலும் அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்பவர்கள் அனைவருமே ஒரு தெளிவான நோக்கத்தின் அடிப்படையில்தான் இயங்குகின்றனர்.
அதாவது, தாங்கள் விரும்பும் ஒரு தென்னிலங்கை வேட்பாளரின் வெற்றியில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஆதரவு நிலை தாக்கத்தை ஏற்படுத்திவிட்டால் என்ன செய்வது? இந்த அடிப்படையில்தான் பொது வேட்பாளர் எதிர்க்கப்படுகின்றார் – அவரை நோக்கித் தமிழ் மக்கள் திரண்டுவிடக்கூடாது என்பதில் ஒரு குறிப்பிட்ட தமிழ் அரசியல் தரப்பினர் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.
அவ்வாறான எதிர்ப்பாளர்கள் ஆரம்பத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் முயற்சி வெற்றிபெற முடியாத ஒரு விடயம் என்றே எண்ணினர். இதனை முன்னெடுப்பவர்கள் ஒரு கட்டத்தில் கை விட்டுவிடுவர் என்றே எண்ணினர். ஒருவேளை முயற்சி தொடர்ந்தாலும்கூட, இவர்களால் வேட்பாளர் நிலைக்கு வர முடியாது – அப்படியே வந்தாலும்கூட வேட்புமனுவை தாக்கல் செய்யப்போவதில்லை என்றெல்லாம் கணக்குப் போட்டனர். ஆனால், அவை அனைத்தையும் தாண்டி இன்று தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டிருக்கின்றார். தமிழ்ப் பொது வேட்பாளர் அடிப்படையில் எவருக்கானவரும் அல்லர் – அவர் தமிழ் மக்களின் அடையாளம்.
தமிழ்த் தேசிய இனப் பிரச்னை தீர்க்கப்படவில்லை என்பதை சொல்வதுடன் – தமிழ் மக்கள் தங்களின் அரசியல் நிலைப்பாடுகளில் உறுதியாக இருக்கின்றனர் என்பதைச் சொல்வதுடன் – தொடர்ந்தும் தமிழ் மக்களை புத்தி சாலித்தனமாக ஏமாற்றிவிடலாம் என்று எண்ணும் தென்னிலங்கை அணுகுமுறை தவறானது என்பதை சொல்வதற்குத்தான் தமிழ் மக்களுக்கு ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் தேவைப்படுகின்றார். எனவே, தமிழ்ப் பொது வேட்பாளர் என்பவர் தமிழ் மக்களுக்கானவரே தவிர, வேறு எவருக்குமானவரல்லர். ஆனால், இந்த உண்மையை மக்கள் புரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காகவே தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் பலவகையான புரளிகள் பரப்பப்படுகின்றன. இதனைத் மக்கள் புரிந்துகொள்ள மாட்டார்களா? – மக்கள் தொடர்ந்தும் போலிகளைக் கண்டு ஏமாந்து கொண்டிருப்பார்களா?