இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிறுவுனர் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 121 ஆவது சிரார்த்ததினம் இன்று (2020.10.30) அனுஷ்டிக்கப்படுகிறது.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் 1930களில் தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்திருந்தார். 1930களின் ஆரம்ப காலப்பகுதியில் அட்டன் நகரில் காந்தி சேவா சங்கம் இயங்கி வந்தது. அச்சங்கக் கூட்டம் ஒன்றுக்கு சௌமியமூர்த்தி தொண்டமானை அழைத்தனர்.
இவ்வாறு ஆரம்பமாகிய அன்னாரின் அரசியல் பயணம் ஜூலை 24, 1939 இல் ஜவஹர்லால் நேருவின் கருத்துக்கேற்ப ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரசின் கம்பளைக் கிளையின் தலைவராக, ஆகஸ்ட் 13 1939 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இலங்கையில் 1930களின் கடைசி பகுதியில் ஏற்பட்ட இந்திய எதிர்ப்பு அலைகள் காரணமாக அதிகளவான தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை இந்திய காங்கிரசில் இணைந்தனர். இதனால் அவர்களது பிரச்சினைகளை பேச வேண்டிய தேவை இலங்கை இந்திய காங்கிரசுக்கு ஏற்பட்டது.
ஆனால் இலங்கை இந்திய காங்கிரஸ் இந்திய தொழிலாளரது பிரச்சினைகளை தோட்ட நிர்வாகத்திடம் கொண்டு சென்ற போது அவர்கள் அரசியல் கட்சியுடன் பேச மறுத்தனர். மாறாக தொழிற்சங்கத்துடன் மட்டுமே பேச முடியுமென வாதிட்டனர்.
இதனால் 1940 மே மாதம் இலங்கை இந்திய காங்கிரசின் தொழிற்சங்க கிளை ஆம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப தலைவராக சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவும் அப்துல் அசீசும் தெரிவுசெய்யப்பட்டனர். 1940 செப்டம்பர் 7 – 8 இல் இலங்கை இந்திய காங்கிரசின் தொடக்க விழாவை தலைமை தாங்கி நடத்திய சௌமியமூர்த்தி தொண்டமான், இந்நிகழ்வே இவரது வாழ்வின் முதலாவது பிரதான அரசியல் நிகழ்வாகும். 1945ஆம் ஆண்டு நுவரெலியா பொதுக்குழுவில் இலங்கை இந்திய காங்கிரசினதும் அதன் தொழிற்சங்கத்தினதும் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டார்.
1947 இல் 95 பாராளுமன்ற அங்கத்தவர்களை தெரிவுசெய்வதற்காக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இலங்கை இந்திய காங்கிரஸ் எட்டு ஆசனங்களுக்கு போட்டியிட்டு ஏழு இடங்களை கைப்பற்றியது. சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா நுவரெலியா தொகுதியில் போடியிட்டு, வெற்றி பெற்றார். சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா தொண்டமான் இலங்கையில் முக்கிய அரசியல் சக்தியாக வளரத் தொடங்கிய போது 1948 பெப்ரவரி 4 இல் இலங்கை சுதந்திரம் பெற்றது.
இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தின் பிரதமரான டி.எஸ். சேனநாயக்கா இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் போது இலங்கை வந்து குடியேறிய இந்திய பாகிஸ்தானிய மக்களது குடியுரிமையை பறிக்கும் சட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றினார்.
சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா இதற்கு எதிராக பாராளுமன்றில் வாதப்பிரதிவாதங்களை செய்தும் பலனற்றுப் போனது. குடியுரிமையைப் பறித்த பின்னர் டி. எஸ். சேனநாயக்கா இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம்-1949 என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தார். இதன்படி இலங்கை குடியுரிமையை பெற பல தகைமைகள் முன்மொழியப்பட்டிருந்தது.
இது சரியான சட்டமாக தெரிந்தாலும் பல நடைமுறைச் சிக்கல்களை கொண்டிந்தது. இதனால் அச்சிக்கல்களைச் சுட்டிக்காட்டி சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா இதனைப் பாராளுமன்றில் எதிர்த்தார்.
இலங்கை இந்திய காங்கிரசின் மத்தியக் குழு யாரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கூடாது என தீர்மானித்தது. இதன்படி பெரும்பான்மையான இந்தியர்கள் விண்ணப்பிக்கவில்லை. டி. எஸ். சேனநாயக்காவின் மரணத்துக்கு பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இதன்போது இந்தியர்கள் குடியுரிமை அற்றவர்களாக இருந்தபடியால் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவும் ஏனைய ஆறு பிரதிநிகளும் மீண்டும் பாராளுமன்றம் செல்ல முடியவில்லை.
ஏப்ரல் 28, 1952 இல் இலங்கைவாழ் இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு பேரணியொன்றையும் சத்தியாக்கிரகம் ஒன்றையும் நடத்த ஆரம்பித்தார். ஏப்ரல் 29, 1952 இல் அசீசுடன் கூடச் சென்று பிரதமரின் அலுவலக அறைக்கு முன்னதாக சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். பல சிக்கல்களுக்கு மத்தியில் இதனை தொடர்ந்து செய்தார்.
பல சந்தர்ப்பங்களில் பொலிசார் அவரை பலவந்தமாக சத்தியாக்கிரக இடத்தில் இருந்து அகற்றினாலும் மீண்டும் அவ்விடத்துக்கு திரும்பினார். பாராளுமன்றம் முன்பாகவும் தமது அகிம்சை போராட்டத்தை தொடர்ந்தார். இப்போராட்டங்கள் காரணமாக அரசு இந்தியர்களை மீண்டும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கோரியது. இதன் போது 850,000 பேர் குடியுரிமைக்காக விண்ணப்பித்தனர்.
பல போராட்டங்களின் பின்னர் மலையக மக்களுக்கு குடியுரிமையை பெற்றுத்தந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா மீண்டும் 1977ஆம் ஆண்டு பாராளுமன்ற தெரிவானதுடன், 1999ஆம் ஆண்டு ஆண்டு இறக்கும்வரை அவர் ஆளும் அரசாங்கங்களில் முக்கிய அமைச்சுப் பதவிகளையும் வகித்திருந்தார்.
ஜே.ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா என நான்கு ஜனாதிபதிகளின் கீழ் அமைச்சுப் பதவிகளை வகித்த சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா, மலையக மக்களை இந்த நாட்டின் தேசிய நீரோட்டத்திற்கு கொண்டுவந்த மாபெரும் தலைவராவார்.
மலையக மக்களுக்கு எதிராக இனவன்முறைகள் கட்டவிழ்த்துவிட்ட சந்தர்ப்பங்களில் மக்களோடு மக்களாக நின்று அவற்றை தடுத்து நிறுத்தினார்.
1999ஆம் ஆண்டு செயமியமூர்த்தி தொண்டமான் ஐயா மறைந்திருந்தாலும் அவர் காட்டிய வழியில் தொடர்ந்து இ.தொ.கா. பயணித்து வருவதாக இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.