நண்பன் வீட்டில்  நகைகளைத் திருடி அடகு வைத்து தனது நாயின்  பிறந்தநாளைக் கொண்டாடிய நபர்: மொரட்டுமுல்லவில் சம்பவம்!

0
273

நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற நபர் ஒருவர், அங்கிருந்த சுமார் ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க வளையலை திருடி,  அதனை அடகு வைத்து அந்தப் பணத்தின் ஊடாக  தனது செல்ல நாய்க்கு பிறந்தநாள் விழா நடத்திய சம்பவம் ஒன்று மொரட்டுமுல்லவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

19 வயதுடைய சந்தேக நபர், தனது   நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருபவர்.  இந்நிலையில், கடந்த வாரம் வீட்டில் இருந்து  தங்க நகை காணாமல் போனதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பின்னர் குறித்த தங்க நகையைத்  திருடியதாக கூறப்படும் நபர் தனது வளர்ப்பு நாய்க்கு பிறந்தநாள் விழா நடத்தியதில் சந்தேகம்  கொண்டு இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில்  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது.

பின்னர், அவரது வீட்டில் இருந்த அடகுக் கடை   பற்றுச்சீட்டை  கண்டுபிடித்து, நகையைத் திருடியவரின் தந்தையைக் கைது செய்தனர்.

சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவரது தந்தை மொரட்டுவ நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்