நெடுந்தீவு பிரதேசத்திற்கான போக்குவரத்து மற்றும் குடிநீர்ப் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பது தொடர்பில் ஏறகனவே அமைச்சரவையில் கலந்துரையாடி, அடுத்த வருடத்திற்கான வரவு-செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்னும் சில வருடங்களில் நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் அக்குழுவின் தலைவர் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் இன்று (06.11.2020) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோதே அமைச்சர் டக்ளஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.
கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் தேசிய திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமானது.
கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப தேசிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு குழுவான கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக் குழுவின் இன்றைய கூட்டத்தில், நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளரால் தமது பிரதேசத்திற்கான போக்குவரத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் எடுத்துக் கூறப்பட்ட நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்குப் பூரணமாக நிதி வழங்கப்படாமையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நலன் கருதி, இந்த வீடுகளுக்கான மீதித் தொகையை வழங்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளதாக வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுரத்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த வீடமைப்புத் திட்டங்கள் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட காணிகளில் அமைக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் எஞ்சிய தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அமைச்சர் டக்ளஸ், அமைச்சரவையில் பிரஸ்தாபித்திருந்த நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்த அறிவுறுத்தலை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கும் வேலைத் திட்டத்தை விரைவில் நிறைவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுத் தலைவர் அமைச்சர் ஜோன்ஸ்டன், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 3000 வீடுகளும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 4000 வீடுகளும் மின்சார இணைப்பு இன்றி காணப்படுகின்றன.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.