இயக்குனர் சுந்தர்.சி-யின் தயாரிப்பு நிறுவனம், அவ்னி மூவீஸ். இந்நிறுவனம் இதுவரை ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’, ‘முத்தின கத்திரிக்கா’, ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ உள்ளிட்ட ஐந்து படங்களை தயாரித்துள்ளது.
தற்போது 6 -ஆவது திரைப்படத்தை தயாரிக்க, கொரோனா காலகட்டத்தில் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், தமிழக அரசின் விதிமுறைகளை ஏற்று இப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்கியது படக்குழு. தற்போது இந்தப் படத்தின் முழு பணிகளும் நிறைவு செய்யப்பட்டு ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. ‘நான் ரொம்ப பிஸி’ என்று படத்திற்குத் தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் பிரசன்னா, ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின், யோகிபாபு, வி.டி.வி கணேஷ், ஆர்.என்.ஆர். மனோகர், ரித்திகா சென், மாஸ்டர் சக்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை ‘வீராப்பு’, ‘தம்பிக்கு எந்த ஊரு’ மற்றும் ‘தில்லு முல்லு’ ஆகிய படங்களை இயக்கிய பத்ரி இயக்கி வருகிறார். சத்யா இசையமைக்க, கிச்சா ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக பிரேமும் மற்றும் நடன இயக்குனராக தினேஷும் பணியாற்றுகிறார்கள். தயாரிப்பு மேற்பார்வை பி.பாலகோபி. கன்னடத்தில் வெளியாகி செம ஹிட்டான, ‘மாயாபஜார் 2016’ என்னும் படத்தின் தமிழ் ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது.